தேர்தல் முடிவுகளை மாற்றுமா ‘மைக்ரோ கன்ட்ரோலர்’ மறு ஆய்வு? – ஒரு தெளிவுப் பார்வை | HTT Explainer

இவிஎம் இயந்திரத்தின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகமுள்ள வேட்பாளர்கள் மறு ஆய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். வாக்கு இயந்திரம் முறை நடைமுறைக்கு வந்தபின்பு வேட்பாளர்கள் மறு ஆய்வுக்கு விண்ணப்பிப்பது இதுவே முதல்முறை. அதில் விண்ணப்பித்துள்ளவர்கள் யார்?. மாற்றம் இருந்தால் என்ன நடக்கும்? அதன் பின்னணி என்ன? – சற்றே தெளிவாகப் பார்ப்போம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது பதிவில், “மனிதர்கள் அல்லது ஏஐ மூலம் ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும்” என்று தெரிவித்தார். இந்தப் பதிவுக்கு முன்னாள் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் “இந்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மிகவும் பாதுகாப்பானவை. வெளிப்புறத்தில் இருந்து ஹேக் செய்ய முடியாதவை” என பதிலளித்தார். இதற்கு எலான் மஸ்க்கோ, “எதையும் ஹேக் செய்யலாம்” என ராஜீவ் சந்திரசேகருக்குப் பதில் கொடுத்தார். எலான் மஸ்க்கின் கருத்துக்கு எதிர்க்கட்சியினர் ஆதரவாகப் பேசினர். இப்படியாக இவிஎம் இயந்திரம் குறித்து மாற்று கருத்துகள் பலருக்கும் இருக்கிறது.

இதற்கு முன்பு மக்களவைத் தேர்தலின்போது, இவிஎம் இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அப்போது வாக்குச் சீட்டு முறைக்கு அனுமதி வழங்க முடியாது என சொன்ன உச்ச நீதிமன்றம், வேட்பாளர்களுக்கு எழும் சந்தேகங்களைத் தீர்க்க உத்தரவிட்டது. குறிப்பாக, இரண்டாம், மூன்றாம் இடம்பிடித்த வேட்பாளர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால், தேர்தல் அதிகாரியிடம் கடிதம் வழங்கி, மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மைக்ரோ கண்ட்ரோலர்களை மறு ஆய்வு செய்யலாம்.

குறிப்பாக, 5% ஒப்புகைச் சீட்டுகளைச் சரிபார்க்கலாம். பொறியாளர்கள் அதனை சரிபார்க்கும்போது வேட்பாளர் உடனிருக்கலாம். அதற்கு உண்டாகும் செலவுகளை வேட்பாளர் வழங்க வேண்டும். ஒருவேளை, முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டால் பணம் திருப்பி செலுத்தப்படும்” எனக் கூறியிருந்தது. இதனை நடைமுறைப்படுத்தும் விதமாக தேர்தல் ஆணையம் சந்தேகிக்கும் வேட்பாளர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்தது. அதன்படி தற்போது வரை மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் 8 பேர் சோதனை செய்யவேண்டும் என விண்ணப்பத்தை வழங்கியுள்ளனர். அதன் விவரம்:

1. ஆந்திரப் பிரதேசத்தின் விஜய்நகரத்தின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பெல்லானா சந்திர சேகர் சோதனை செய்ய விண்ணப்பம் வழங்கியிருக்கிறார். அந்தத் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அப்பலநாயுடு காளிசெட்டி 7,43,113 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பெல்லானா சந்திர சேகர் 4,93,762 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்திருக்கிறார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 19% என்பது குறிப்பிடத்தக்கது. 2 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 2 வாக்குச் சாவடியில் உள்ள இயந்திரங்களைச் சோதனையிட விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

2. சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் பிரேஷ் தாக்கூர் 5,95,740 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த போஜ்ராஜ் நாக் 5,97,624 வாக்குகள் பெற்று வென்றிருக்கிறார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 0.15% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இங்கு 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட 4 வாக்குச் சாவடியில் உள்ள இயந்திரங்களைச் சோதனையிட விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

3. ஹரியாணா கர்னல் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த மனோகர் லால் 7,39,285 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸைச் சேர்ந்த திவ்யான்ஷு புத்திராஜா 5,06,708 பெற்று இரண்டாம் இடம்பிடித்தார். இவர்தான் விண்ணப்பம் கொடுத்திருக்கிறார். இவர்கள் இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 17.28%. இங்கு 2 சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 4 வாக்குச் சாவடியில் உள்ள இயந்திரங்களைச் சோதனையிட விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.

4. ஹரியாணா மாநிலம் ஃபரிதாபாத் தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த கிருஷ்ணன் பால் 7,88,569 வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பாகக் களமிறங்கிய மஹேந்தர் பிரதாப் சிங் 6,15,655 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இந்த இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 11.76%. காங்கிரஸ் சேர்ந்த மஹேந்தர் பிரதாப் சிங் சோதனை செய்ய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் வழங்கியுள்ளார். 2 சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 2 வாக்குச் சாவடியில் உள்ள இயந்திரங்களைச் சோதனையிட விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

5.மகாராஷ்டிர மாநிலம் அக்மத்நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிலேஷ் தினியாண்டேவ் லங்கே 624797 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுஜய் ராதாகிருஷ்ண விகேபட்டில் 5,95,868 பெற்று தோல்வியைத் தழுவினார். இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள வாக்கு வித்தியாசம் 2.19%. தற்போது பாஜக வேட்பாளர் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பத்தை வழங்கியுள்ளார். இங்கு 6 தொகுதிக்கு உட்பட்ட 40 வாக்குச் சாவடிகளில் சோதனை செய்ய விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

6. தமிழ்நாட்டில் வேலூரில் திமுகவைச் சேர்ந்த கதிர் ஆனந்த 5,68,692 பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து பாஜக சார்பாகக் களமிறக்கப்பட்ட வேட்பாளர் ஏசி சண்முகம் 35,2990 பெற்று இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 19.1%. இங்கு 6 சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 6 வாக்குச் சாவடியில் வாக்கு இயங்திரங்களைச் சோதனையிட விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.

7. விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் 3,85,256 பெற்று முதலிடத்தையும், தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர். இங்கு விருதுநகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவைகளைச் சோதனையிட விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இருவருக்குமான வாக்குவித்தியாசம் 0.41 % என்பது குறிப்பிடத்தக்கது.

8. தெலங்கானாவில் சகிராபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் குமார் ஷெட்கர் 5,28,418 வாக்குகள் பெற்று வென்றிருந்தார். இவரை எதிர்த்து களம் கண்ட பாஜக வேட்பாளர் பி.பி.பாட்டீல் 4,82,230 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம்பிடித்தார், இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 3.73%. பாஜக வேட்பாளர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார். குறிப்பாக, 3 சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 20 வாக்குச்சாவடிகளைச் சோதனையிட விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இப்படியாக, மொத்தமாக 8 தொகுதியில் உள்ள 92 வாக்குச் சாவடிகளில் மறுஆய்வு செய்ய வேண்டும் என தேர்தல ஆணையத்திடம் வேட்பாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இது தேர்தல் முடிவுகளை மாற்றுமா? – இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மைக்ரோ கன்ட்ரோலர்களை மறு ஆய்வு செய்ய முடியும். குறிப்பாக, 5% ஒப்புகைச் சீட்டுகளை மட்டுமே சோதனை செய்ய முடியும். அதாவது, இவிஎம்மில் செலுத்திய வாக்கும் விவிபேட்டில் பதிவான வாக்கும் ஒன்றுதானா? என்பதைச் சோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கு கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் 5% வாக்குகள் மட்டுமே சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் குறிப்பிட்ட போலிங் பூத்தின் மீது வாக்கு எண்ணிக்கையின்போது சந்தேகம் கொண்ட வேட்பாளர்கள் அந்தப் போலிங் பூத்தில் மறுஆய்வு செய்ய விண்ணப்பித்துள்ளனர். இதில், முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தால், வேட்பாளர்கள் விண்ணப்பத்துக்கு செலுத்தப்பட்டிருக்கும் கட்டணம் திருப்பி அளிக்கப்படும். இதனை நீதிமன்றத்தில் தேர்தல் மனுவாக வழங்கி வழக்குத் தொடுக்கப்பட்டுதான் தீர்வை அறிந்துகொள்ள முடியும்.

பெரிய மாற்றங்கள் நிகழுமா என்பது கேள்விதான். அதனால்தான் சில ஆயிரங்களில் வெற்றியை நழுவவிட்டவர்களுக்கும் கூட மறு ஆய்வுக்கு விண்ணப்பிக்கவில்லை என்னும் கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.