நடுத்தர-தூர நுண்ணலை மறைப்பு ராக்கெட்டை கடற்படையிடம் ஒப்படைத்தது டிஆர்டிஓ

புதுடெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), புதுடெல்லியில் இன்று (ஜூன் 26) நடைபெற்ற விழாவில் நடுத்தர தூர-நுண்ணலை மறைப்பு ராக்கெட்டை இந்தியக் கடற்படையிடம் ஒப்படைத்தது.

ஜோத்பூரில் உள்ள டிஆர்டிஓவின் பாதுகாப்பு ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட நுண்ணலை மறைப்பு ராக்கெட், ரேடார் சிக்னல்களை மறைத்து, தளங்கள் மற்றும் சொத்துக்களைச் சுற்றி நுண்ணலை கவசத்தை உருவாக்குகிறது. இது ரேடார் கண்டறிதலைக் குறைக்கிறது.

இந்த ராக்கெட்டில் சில மைக்ரான் அளவுள்ள விட்டத்துடன் தனித்துவமான நுண்ணலை மறைக்கும் பண்புகள் கொண்ட சிறப்பு வகை இழைகள் பொருத்தப்பட்டுள்ளன. ராக்கெட் ஏவப்படும் போது, போதுமான பரப்பளவில் விண்வெளியில் பரவும் நுண்ணலை தெளிவற்ற மேகத்தை உருவாக்குகிறது. இது அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒரு பயனுள்ள கேடயமாகிறது.

ராக்கெட்டின் முதல் கட்டச் சோதனைகள் இந்திய கடற்படை கப்பல்களில் இருந்து வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இது நுண்ணலை மேகங்கள் உருவாவதையும் விண்வெளியில் தொடர்ந்து இருப்பதையும் நிரூபித்தது. இரண்டாம் கட்டச் சோதனைகளில், ரேடாரின் வான்வழி இலக்கை 90 சதவீதம் வரை குறைப்பது இந்தியக் கடற்படையால் நிரூபிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தகுதித் தேவைகளையும் பூர்த்தி செய்ததையடுத்து இந்த ராக்கெட் இந்திய கடற்படையிடம் வெற்றிகரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எம்ஆர்-எம்ஓசிஆர் செயற்கைக்கோளை வெற்றிகரமாக மேம்படுத்தியதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்தியக் கடற்படைக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். பாதுகாப்பு துறையில் தற்சார்பு நிலையை அடைவதற்கான மற்றொரு படி எம்.ஓ.சி தொழில்நுட்பம் என்று அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் இந்திய கடற்படையின் கடற்படை ஆயுத ஆய்வு தலைமை இயக்குநர் ரியர் அட்மிரல் பிரிஜேஷ் வஷிஸ்தாவிடம் இதனை ஒப்படைத்தார். இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக ஜோத்பூரில் உள்ள பாதுகாப்பு ஆய்வகக் குழுவை டிஆர்டிஓ தலைவர் பாராட்டினார். பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொழில்நுட்பத்தை குறுகிய காலத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கியதற்காக டிஆர்டிஓவின் முயற்சிகளை இந்தியக் கடற்படையின் ஆயுத ஆய்வு தலைமை இயக்குநர் பாராட்டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.