நியோமேக்ஸ் வழக்கின் நிலை என்ன? – விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம், தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மோசடி செய்தது. இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து வீரசக்தி, கமலக்கண்ணன் பாலசுப்ரமணியன், கபில் உட்பட பலரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக சிவகங்கையை சேர்ந்த நடராஜன் தாக்கல் செய்த மனுவில், “நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய பாலசுப்பிரமணியன், முத்துக்குமார், ரம்யா, சசிகலா, கார்த்திகேயன், இளையராஜா, சார்லஸ், நடேஷ்பாபு உள்ளிட்டோர் மோசடி பணத்தில் அதிக அளவில் சொத்துக்கள் வாங்கியுள்ளனர். இந்த சொத்துக்களின் பட்டியல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை முடக்கவும், ஜப்தி செய்யவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அதன் அடிப்படையில் இவர்களின் சொத்துக்கள் மற்றும் இவர்களது உறவினர்களின் சொத்துக்களை முடக்கி ஜப்தி செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்,” எனக் கூறப்பட்டிருந்தது.

கும்பகோணத்தை சேர்ந்த கவுதமி தாக்கல் செய்த மனுவில், “நியோமேக்ஸ் நிறுவனத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்துள்ளேன். நியோமேக்ஸ் இயக்குநர்களின் பேச்சை நம்பி உறவினர்களிடம் பேசி ரூ. ஒரு கோடியே 5 லட்ச ரூபாய் வரை முதலீடு செய்ய வைத்தேன். இது தொடர்பாக நியோமேக்ஸ் இயக்குனர்களிடம் கேட்டதற்கு அவர்கள் என்னை தாக்க முயன்றனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்,” எனக் கூறியிருந்தார்.

இந்த மனுக்களை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அப்போது நீதிபதி, போதுமான பணியாளர்கள் இல்லை என்று கூறி வழக்கு விசாரணைக்கு சிபிஐ மறுப்பு தெரிவிக்கும். இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில் அதன் தற்போதைய நிலை என்ன? பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது? எவ்வளவு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதா? அதன் விபரம் என்ன? என்பது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.