புதுடெல்லி: மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் நடந்த தேர்தலில் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அவரை பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அழைத்து வந்து சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர். இதன்மூலம் கடந்த 25 ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்வானவர் என்ற பெருமையைப் பெற்றார் ஓம் பிர்லா.
முன்னதாக, மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஓம் பிர்லாவின் பெயரை அவையில் முன்மொழிந்தார் பிரதமர் மோடி. பிரதமரால் முன்மொழியப்பட்ட ஓம் பிர்லாவின் பெயரை பாஜக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் வழிமொழிந்தனர்.
அதேபோல் சபாநாயகர் பதவிக்கு இண்டியா கூட்டணி வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷின் பெயரை இண்டியா கூட்டணி எம்.பி.க்கள் முன்மொழிந்தனர். வயநாடு தொகுதி காலியாக உள்ளதால், சபாநாயகர் தேர்தலில் வெற்றி பெற பெரும்பான்மைக்கு 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 48 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டதில், ஓம் பிர்லா தேர்வாகினார். அவரை இருக்கைக்கு அழைத்துச் செல்லும்போது பிரதமர் மோடியும், ராகுல் காந்தியும் கைகுலுக்கினர்.
பின்னணி: 18-வது மக்களவையின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 262 புதிய எம்.பி.க்களுக்கு தற்காலிக மக்களவை தலைவர் மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து, 281 எம்.பி.க்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். புதிய மக்களவை தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் மக்களவை தலைவர் தேர்வு செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது, மக்களவை துணை தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று கார்கே வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால், திமுக எம்.பி. டிஆர்.பாலு ஆகியோர் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினர். அப்போதும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த சூழலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா நேற்று மக்களவை தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, இண்டியா கூட்டணி சார்பில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.