ராணுவ ரகசியங்களை கசியவிட்ட வழக்கு: ஜூலியன் அசாஞ்சை விடுவித்தது அமெரிக்க நீதிமன்றம்

சைப்பேன்: அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்ட வழக்கில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை விடுவித்தது அமெரிக்காவின் வடக்கு மரியானா தீவுகளில் உள்ள ஃபெடரல் நீதிமன்றம்.

52 வயதான அவர், கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 1901 நாட்களுக்கு பிறகு பிரிட்டன் நாட்டு சிறையிலிருந்து விடுதலை ஆனார். தனது விடுதலைக்கு ஈடாக அமெரிக்க நாட்டு ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தியதற்காக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள அசாஞ்ச் ஒப்புக்கொண்டார்.

அதன்படி அவர் அமெரிக்காவின் வடக்கு மரியானா தீவுகளில் உள்ள ஃபெடரல் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் மீதான வழக்கு விசாரணை சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்றது. அதில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார். அதே நேரத்தில் பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையிலான அரசியலமைப்பின் முதல் திருத்தம் தனது செயலை அனுமதிக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, அவரது குற்றத்தை உறுதி செய்தார். இருந்தும் பிரிட்டிஷ் நாட்டு சிறையில் நீண்ட நாட்கள் இருந்த காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.

தொடர்ந்து தனி விமானத்தில் அவர் ஆஸ்திரேலியா திரும்பினார். அவருடன் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கான ஆஸ்திரேலிய தூதர்களும் பயணித்துள்ளனர். இந்திய நேரப்படி புதன்கிழமை மதியம் 2.30 மணி அளவில் அவரது விமானம் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இவர்? ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜூலியன் அசாஞ்ச் (52) கடந்த 2006-ம் ஆண்டில் விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கினார். கடந்த 2010-ல் ஆப்கானிஸ்தான், இராக் போர் தொடர்பான ரகசிய ஆவணங்கள் இந்த இணையதளத்தில் வெளியாகின. இதில் அமெரிக்க ராணுவத்தின் பல்வேறு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்டன.

இந்தச் சூழலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் அவரை கைது செய்ய கடந்த 2010-ம் ஆண்டு நவம்பரில் சுவீடன் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கடந்த 2012-ம் ஆண்டில் பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈகுவடார் அரசு வாபஸ் பெற்றது. இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் போலீஸார், அவரை கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக தெற்கு லண்டனில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டு உள்ளார்.

அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்ச் மீது அந்த நாட்டு அரசு சுமத்தி உள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு ஜூனில் ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று அமெரிக்க நாட்டு நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் மீதான நீதிமன்ற விசாரணையில் விடுதலையாகி உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.