மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை முறையில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. தற்போது அரசு ஊழியர்கள் தங்களது குழந்தைகள் பராமரிப்புக்கு பணிக்காலத்தில் அதிகபட்சம் 730 நாள்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள முடியும். என்றாலும், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு இதுபோன்ற சலுகைகள் கிடையாது.
இந்நிலையில், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டாலும் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக மத்திய சிவில் சர்வீஸ் விதிகளில் திருத்தம் செய்து, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அரசாணை பிறப்பித்துள்ளது.
இதன்படி, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும், அரசுப் பணியில் உள்ள பெண்களுக்கு 180 நாள்கள் (6 மாதங்கள்) விடுமுறை வழங்கப்படும். வாடகைத்தாயாக இருந்து குழந்தை பெற்றுக்கொடுக்கும் பெண் அரசு ஊழியராக இருந்தால், அவருக்கும் 6 மாதகால விடுமுறை கொடுக்கப்படும். மேலும், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் தந்தைக்கும் 15 நாள்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறை வழங்கப்படும். குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குள் இந்த விடுமுறையை எடுத்துக்கொள்ளவேண்டும்.
இந்த சலுகைகள், இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே உள்ள சட்டம், 1972-ம் ஆண்டில் இருந்து அமலில் இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு பிறகு அச்சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்து இருக்கிறது. அரசின் இச்சட்டதிருத்தத்தை பெண்கள் வரவேற்றுள்ளனர். அதேசமயம், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை ஒழுங்குபடுத்த, அதிலும் அரசு பல புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறது.