ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் `இந்தியன் 2′.
1996-ம் ஆண்டு ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டிருக்கின்றனர்.
ஜூலை 12-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் டிரெய்லர் வெளியீட்டிற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மும்பையில் நடைபெற்றது. அப்போது, பத்திரிகையாளர் ஒருவர், “சேனாபதி (இந்தியன் தாத்தா) 1918-ம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்று முதல் பாகத்தில் வரும் பயோடேட்டாவில் இருக்கிறது. அப்படியென்றால் கிட்டத்தட்ட இந்தியன் தாத்தாவிற்கு 106 வயதாகிறது என்று நினைக்கிறேன். இதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த கமல், “இந்தியன் தாத்தாவிற்கு 140 வயது கூட இருக்கட்டும். எனக்கு அது பற்றி எல்லாம் தெரியாது. இயக்குநரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால் இந்தியன் தாத்தாவை வயதை வைத்து எடைபோட முடியாது. அதேபோல நான் 120 வயதிலும் நடிப்பேன். அதனால் வயது ஒரு விஷயமே கிடையாது” என்று கூறியிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து இந்தியன் தாத்தா வயது குறித்துப் பேசிய ஷங்கர், “சீனாவில் வர்மக்கலை தெரிந்த ஒரு நபர் இருக்கிறார். அவருக்கு 120 வயது. அவர் இந்த வயதிலும் வர்மக்கலை செய்துகொண்டுதான் இருக்கிறார். இந்த சேனாபதி கதாபாத்திரத்திற்கும் வர்மக்கலை தெரியும். உணவுப் பழக்க வழக்கம், யோகா, மெடிடேஷன் என அனைத்தையும் சரியாகச் செய்தால் வயது ஒரு விஷயமே கிடையாது” என்று விளக்கம் அளித்திருக்கிறார்.