ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள `இந்தியன் 2′ திரைப்படம் வரும் ஜூலை 12ம் தேதி திரையைக் காணவிருக்கிறது. இந்தியில் இத்திரைப்படம் `இந்துஸ்தானி 2′ என்ற பெயரில் வெளியாகிறது.
முதல் பாகத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்திற்கு அனிரூத் இசையமைத்திருக்கிறார். 1996-ம் ஆண்டு வெளியான இப்படத்தின் முதல் பாகம் தமிழ்நாட்டில் இருக்கும் ஊழல் குறித்துப் பேசிய நிலையில், இரண்டாம் பாகம் இந்திய அளவில் இருக்கும் பிற மாநிலங்களின் அரசியல் பிரச்னைகளையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இப்படம் ஜூலை 12ம் தேதி திரையரங்குகளில் இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி படக்குழு நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியிருந்தனர். இதையடுத்துத் தற்போது மும்பையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ‘இந்தியன் 2’ திரைப்படம் குறித்துப் பேசியிருக்கின்றனர்.
இந்தச் சந்திப்பில் அட்லி, கமல், ஷங்கர், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதில் பேசிய இயக்குநர் அட்லி, “நான் ஷங்கர் சாரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியபோது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பே ‘இந்தியன் 2’ கதை பற்றி இருவரும் உரையாடியிருக்கிறோம். நிச்சயம் இத்திரைப்படம் இந்திய சினிமாவிற்குப் பெருமை சேர்க்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும்.
இந்திய சினிமாவின் பைபிள் கமல் சார். அவர் சினிமாவுக்காக அனைத்தையும் கொடுத்திருக்கிறார். அவரது படங்களைப் பார்த்து சினிமா கற்றுக் கொண்டுதான் நான் சினிமாவிற்கு வந்தேன். என் மகன் நாளை சினிமா பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்று விரும்பினால் முதலில் கமல் சார் படத்தைத்தான் பார்க்கச் சொல்லுவேன். கமல் சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.