Semi Finals: ` நாளை மழை பெய்தால்…!' இந்தியா – இங்கிலாந்து போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாதா?

டி20 உலகக்கோப்பைத் தொடரின் அரையிறுதிப் போட்டிகள் நாளை நடக்கவிருக்கிறது. தென்னாப்பிரிக்காவும் ஆஃப்கானிஸ்தானும் ஒரு அரையிறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்தியாவும் இங்கிலாந்தும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் மோதுகின்றன.

இந்த இரண்டு போட்டிகளில் இந்தியா ஆடும் போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது. இதனால் இந்தியாவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என சமூக வலைதளங்களில் சில ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். இதில் உண்மை என்ன?

raining ( representational image)

இந்தியா -இங்கிலாந்து அணிகள் ஆடும் போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது. ஆனால், தென்னாப்பிரிக்கா – ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு ரிசர்வ் டே உண்டு என்பது உண்மைதான். ஆனால், இதை அப்படி மேலோட்டமாக மட்டுமே பார்க்கக்கூடாது.

தென்னாப்பிரிக்காவும் ஆஃப்கானிஸ்தானும் மோதும் போட்டி டிரினிடாட்டில் நடக்கிறது. இந்திய நேரப்படி ஜூன் 27 ஆம் தேதி காலை 6 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. ஆனால், உள்ளூர் நேரப்படி இந்தப் போட்டி ஜூன் 26 ஆம் தேதி இரவு 8:30 மணிக்கு தொடங்குகிறது. ஜூன் 29 ஆம் தேதிதான் இறுதிப்போட்டி திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆக, ஒரு வேளை இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டாலும் ரிசர்வ் டே கொடுக்க முடியும். ரிசர்வ் டேவாக 27 ஆம் தேதி இருக்கும். இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் அணிக்கு இறுதிப்போட்டிக்கு முன்பாக ஒருநாள் இடைவேளை கிடைக்கும். அதனால்தான் இந்தப் போட்டிக்கு ரிசர்வ் டே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தியா – இங்கிலாந்து போட்டிக்கு ரிசர்வ் டே கொடுக்கும் வாய்ப்பு இல்லை.

ஏனெனில், இந்தியா – இங்கிலாந்து போட்டி இந்திய நேரப்படி 27 ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடக்கிறது. கயானாவின் உள்ளூர் நேரப்படி 27 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது. ரிசர்வே டே கொடுக்கப்படும்பட்சத்தில் போட்டி 28 ஆம் தேதிக்கு செல்லும். ஆக, அரையிறுதியில் வெல்லும் அணி இடைவெளியே இல்லாமல் அடுத்த நாளே இறுதிப்போட்டியில் ஆட வேண்டியிருக்கும். எந்த அணியும் அப்படி ஆட விரும்பாது. அதனால்தான் இந்தப் போட்டிக்கு ரிசர்வ் டே இல்லை. சரி, இதனால் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் அநீதி இழைக்கப்படுகிறதா? இல்லை என்றே சொல்ல வேண்டும்.

ஏனெனில், ஐ.சி.சி இரு போட்டிகளுக்குமே சம அளவில் 250 நிமிடங்களை கூடுதல் நேரமாக கொடுத்திருக்கிறது. அதாவது போட்டிக்கென்று வழக்கமாக ஒதுக்கப்பட்டிருக்கும் நேரத்தோடு கூடுதலால 250 நிமிடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள். இதனால் மழை பெய்யும்பட்சத்தில் காத்திருந்து கூட போட்டியை நடத்த முடியும்.

தென்னாப்பிரிக்கா – ஆஃப்கானிஸ்தான் போட்டி உள்ளூர் நேரப்படி இரவு நடப்பதால் அந்த கூடுதல் 250 நிமிடத்தில் 60 நிமிடங்களை மட்டும் போட்டி நாளன்று எடுத்துக் கொள்வார்கள். அதற்குள் போட்டியை நடத்தி முடிக்க முயல்வார்கள். இல்லையெனில் மீதமுள்ள 190 நிமிடங்களை ரிசர்வ் டேவில் பயன்படுத்திக் கொள்வார்கள்.

இந்தியா – இங்கிலாந்து போட்டிக்கும் இதே 250 நிமிடங்களைத்தான் கூடுதலாக கொடுத்திருக்கிறார்கள். ஆனால், இந்தியா – இங்கிலாந்து போட்டி உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணிக்கே தொடங்குவதாலும் ரிசர்வ் டே வைக்க வாய்ப்பில்லை என்பதாலும் போட்டியன்றே இந்த கூடுதல் 250 நிமிடங்களையும் பயன்படுத்திக் கொள்வார்கள். சாயங்காலம் வரைக்கும் காத்திருந்து கூட போட்டியை நடத்திவிடுவார்கள்.

லீக் போட்டிகள் மற்றும் சூப்பர் 8 இல் மழை பெய்கிற போது ஒரு போட்டியில் முடிவை எட்ட வேண்டுமெனில் இரண்டு அணிகளும் குறைந்தபட்சமாக 5 ஓவர்களையாவது ஆடியிருக்க வேண்டும். ஆனால், இப்போது அரையிறுதியிலும் இறுதியிலும் இரு அணிகளும் குறைந்தபட்சமாக 10 ஓவர்களாவது ஆடியிருந்தால்தான் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி முடிவை எட்ட முடியும்.

ரிசர்வ் டே அல்லது கூடுதலாக கொடுக்கப்படும் இந்த 250 நிமிடங்கள் என இவற்றை பயன்படுத்தியும் போட்டியை நடத்த முடியாத அளவுக்கு மழை பெய்யும்பட்சத்தில் சூப்பர் 8 சுற்றில் அதிக புள்ளிகளை எடுத்திருக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அப்படி நடந்தால் அது இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் சாதகமாக முடியும்.

நாளைய அரையிறுதிப் போட்டிகளில் மழை பெய்தால் இதுதான் நடக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.