650சிசி சந்தையில் உள்ள ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ரெட்ரோ வடிவமைப்பினை பெற்றுள்ள பிஎஸ்ஏ நிறுவன கோல்டு ஸ்டார் 650 மாடலில் இடம்பெற்றுள்ள அனைத்து முக்கிய விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்ற பிஎஸ்ஏ, ஜாவா மற்றும் யெஸ்டி போன்ற நிறுவனங்களில் ஜாவா, யெஸ்டி பிராண்டு இந்தியாவில் கிடைக்கின்றது. இங்கிலாந்து, ஐரோப்பாவில் உள்ள சில நாடுகளில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த பிஎஸ்ஏ பிராண்டினை தற்பொழுது இந்திய சந்தைக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி விற்பனைக்கு வெளியிட உள்ளதாக இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
Gold Star Design
தனது ரெட்ரோ வடிவமைப்பினை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கின்ற பிஎஸ்ஏ நிறுவனத்தின் கோல்டு ஸ்டார் மாடலில் மிக நேர்த்தியான டியர் டிராப் பெட்ரோல் டேங்க் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. இதனைத் தொடர்ந்து வட்ட வடிவ ஹெட்லைட் அமைப்பு மற்றும் பிஎஸ்ஏ லோகோ டேங்க் இன் மத்தியில் வழங்கப்பட்டு சுமாராக 6 விதமான நிறங்கள் ஆனது இந்த பைக்கில் கொடுக்கப்படுகின்றது.
கருப்பு, சில்வர், சிவப்பு, பச்சை மற்றும் மிட்நைட் பிளாக் என 5 நிறங்களுடன் கூடுதலாக சில்வர் நிறத்திலான லெகசி எடிசனும் உள்ளது.
கோல்டு ஸ்டார் என்ஜின்
கோல்டு ஸ்டாரில் இடம்பெற்றுள்ள 652சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்ச பவரை 6500rpm-ல் 45hp , 4000rpm-ல் 55Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் இதில் ஐந்து வேக கியர்பாக்ஸுடன் சிலிப்பர் அசிஸ்ட் கிளட்ச் வசதி இணைக்கப்பட்டுள்ளது.
மெக்கானிக்கல் அம்சங்கள்
இரு பிரிவுகளை கொண்ட வட்ட வடிவ அனலாக் கிளஸ்ட்டரை பெற்றுள்ள பைக்கில் ஸ்போக்டூ வீல் பெற்றுள்ள பிஎஸ்ஏ கோல்டு ஸ்டாரில் முன்பக்கத்தில் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர் கொண்டுள்ளது. பிரேக்கிங் அமைப்பில் முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 255 மிமீ டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
12 லிட்டர் பெட்ரோல் டேங்கினை கொண்டு 780 மிமீ இருக்கை உயரத்துடன் முன்பக்கத்தில் 18 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீலுடன் பைரேலி பான்டம் ஸ்போர்ட்ஸ்காம்ப் (Pirelli Phantom Sportscomp) டயரை பெற்று முன்புறத்தில் 100/90 மற்றும் 150/70 பின்புற டயரை கொண்டுள்ளது.
போட்டியாளர்கள்
இந்திய சந்தையில் கிடைக்கின்ற ராயல் என்ஃபீல்டின் ட்வீன் சிலிண்டர் பெற்ற இன்டர்செப்டார் 650 பைக்கினை நேரடியாக எதிர்கொள்ளுகின்ற கோல்டு ஸ்டாருக்கு மற்ற என்ஃபீல்டு 650சிசி மாடல்களும் சவால் விடுக்கின்றது.
பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் விலை எதிர்பார்ப்பு
வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள பிஎஸ்ஏ கோல்டு ஸ்டாரின் விலை ரூ.3.00 லட்சம் முதல் ரூ.3.30 லட்சத்துக்குள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ட்வீன் சிலிண்டர் பெற்ற இண்டர்செப்டார் போல அல்லாமல் ஒற்றை சிலிண்டரை மட்டும் இந்த மாடல் கொண்டுள்ளது.