‘ஆம்னி’ வெளிமாநில பதிவு எண் விவகாரம்; தமிழக அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

புதுடெல்லி: வெளி மாநில பதிவு எண் கொண்டஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க கூடாது என்ற தமிழகஅரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளை தடுக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல தனியார் பேருந்து நிறுவனங்கள் பதிவு கட்டணத்தை குறைப்பதற்காக நாகாலாந்து உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தங்களது ஆம்னி பேருந்துகளை பதிவு செய்து, தமிழகத்தில் இயக்கி வந்தன. இதனால், மாநில வருவாய்பாதிக்கப்படுவதாக கூறி, வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்க அரசு தடை விதித்தது.

தமிழ்நாடு மோட்டார் வாகனசட்டப்படி, தமிழகத்தில் பதிவுசெய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். இதனால், வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்ய வேண்டும் என்றும், மீறி இயக்கப்படும் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்தது.



இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் கே.ஆர்.சுரேஷ்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ‘கேரளாவில் இருந்து இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகள் அகில இந்திய சுற்றுலா பெர்மிட் பெற்று தமிழகம் வழியாக மற்றவெளிமாநிலங்களுக்கும் இயக்கப்படுகிறது.

ஆனால், தமிழக அரசின்உத்தரவால், கேரளாவில் பதிவுசெய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்திலும், தமிழகம் வழியாகவும் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான விடுமுறை கால சிறப்பு அமர்வில் இந்த மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘தமிழகத்துக்கு ஏற்படும் வருவாய் இழப்பை கருத்தில் கொண்டே இவ்வாறு உத்தரவிடப்பட்டது. வெளி மாநில பதிவு எண் கொண்ட சுற்றுலா வாகனங்களை ரெகுலர் சர்வீஸாக இயக்குவதை எதிர்த்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது’ என்று வாதிடப்பட்டது.

பதில் அளிக்க நோட்டீஸ்: இதையடுத்து, நீதிபதிகள், ‘‘அகில இந்திய சுற்றுலா பெர்மிட் பெற்றிருக்கும் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படுவதை தமிழக அதிகாரிகள் தடுக்க கூடாது’’ என்று கூறி, தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு விரிவாக பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை தள்ளிவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.