கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை கோரி சென்னையில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க-வினர் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நேரில் கலந்துகொண்டு அ.தி.மு.க-வின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் தி.மு.க முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இவரைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென்ற அ.தி.மு.க-வின் சனநாயக கோரிக்கையை நிராகரித்து, அ.தி.மு.க உறுப்பினர்கள் அனைவரையும் தி.மு.க அரசு இடைநீக்கம் செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. பா.ஜ.க அரசின் சனநாயக விரோதச் செயல்பாட்டை மாறாமல் பின்பற்றும் தி.மு.க அரசின் இக்கொடுங்கோன்மையை அ.தி.மு.க-வினர் மேற்கொண்டுவரும் பட்டினி அறப்போராட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ட்வீட் செய்தார்.
இந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, “போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா, புரட்சி பாரதம், எஸ்.டி.பி, இந்திய குடியரசு கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. இந்தியாவே கள்ளக்குறிச்சி நோக்கி பார்க்கவைக்கிற சம்பவம் 18-ம் தேதி அரங்கேறியது. விலைமதிக்க முடியாத பல உயிர்களை இழந்துவிட்டோம். மாதவச்சேரி, சேஷசமுத்திரம், கருணாபுரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தியதால் இன்றுவரை 63 உயிர்களை இழந்திருக்கிறோம். பலர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பலருக்கு கண் பார்வை போய்விட்டது. அரசாங்கத்தின் அழுத்ததின்பேரில் மாவட்ட ஆட்சித் தலைவர் தவறான தகவல் கொடுத்ததன் விளைவாக இத்தனை உயிர்கள் பறிபோய்விட்டது.
பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் சட்டமன்றத்தில் இதுபற்றி பேச அவை விதி பிரிவு 56-ன் கீழ் சட்டப்பூர்வமாக மனு அளித்து அனுமதி கேட்டோம். ஆனால், சபாநாயகர் கேள்வி நேரத்தின்போது இதை எடுத்துக்கொள்ள முடியாது என்கிறார். பின்னர், எங்களை அவையிலிருந்து வெளியேற்றிவிட்டு, அதன் பிறகு 15 நிமிடங்கள் கள்ளக்குறிச்சி மரணத்தைப் பற்றி முதல்வர் விவரிக்கிறார். இதுதான் நீதியா… எதிர்க்கட்சிகளைப் பேசவிட்டு அதன் பிரச்னைகளை ஆராய்ந்து தீர்த்துவைப்பதே நல்ல அரசுக்கு அடையாளம்.
சட்டமன்றத் தேர்தலின்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஒவ்வோர் ஆண்டும் 100 நாள்கள் சட்டமன்றம் நடைபெறும் என்று ஸ்டாலின் சொன்னார். ஆனால், இன்றைய நிலை ஐந்து ஆண்டுகள் முழுமையாக விடியா தி.மு.க இருந்தாலும் 100 நாள்கள் சட்டமன்றம் நடைபெறாது. எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்கும் சர்வாதிகார ஆட்சி இங்கு நடைபெறுகிறது. அவையில் நான் பேசுவதை நேரடி ஒளிபரப்பு செய்திருந்தால், அவர்கள் சொல்வதைப்போல கிழி கிழி என கிழித்திருப்பேன். அந்த வாய்ப்பு கொடுக்க மறுக்கிறார்கள். சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பாக தொடர்ந்து கூறிவந்தபோதும் இந்த அரசு செவிடன் காதில் சங்கு ஊதியதுபோல அமைதியாக இருந்ததால், இன்றைக்கு இத்தனை உயிர்கள் போய்விட்டது.
மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அரசு கூறுகிறது. ஆனால், அதற்கான விஷ முறிவு மருந்து 18, 19 ஆகிய தேதிகளில் மருத்துவமனையில் இல்லை. 20-ம் தேதி நான் பேட்டி கொடுத்த பிறகுதான், அவசர அவசரமாக மும்பையிலிருந்து அந்த மருந்தை வாங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தியிருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி 40 இடங்களையும் வென்றதால், அ.தி.மு.க வேண்டுமென்றே திசை திருப்புவதாக சட்டமன்றத்தில் ஸ்டாலின் கூறுகிறார். இதே ஸ்டாலின், எதிர்க்கட்சி என்றால் அரசியல் செய்யாமல், அவியலா செய்யும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போது கூறியிருந்தார். அனைத்து துறைகளும் சிறப்பாக நடப்பதாக அவர் கூறுகிறார். ஆனால், எப்படிப்பட்ட ஆட்சி நடக்கிறது என்பதற்கு இந்த சம்பவமே சான்று.
இந்த கள்ளச்சாராய மரணத்தில் காவல்துறை அதிகாரிகள், வருவாய் துறை என அரசு உயரதிகாரிகள், ஆளுங்கட்சியின் அதிகாரமிக்கவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் மாநில அரசுக்கு உட்பட்டவர்கள். மாநில அரசாங்கத்துக்குட்பட்ட சிபிசிஐடி எப்படி இவர்களை நியாயமாக விசாரிக்கும். அதனால் சிபிஐ விசாரணை கோருகிறோம். ஆனால், இந்த அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதனால், அ.தி.மு.க சார்பாக நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். ஜூலை 3-ம் தேதிக்கு இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நேற்று இரவு 9 மணிக்குத்தான் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்தார்கள். அதுவும், 23 நிபந்தனைகளை விதித்து. தி.மு.க ஆட்சி வந்ததிலிருந்து கருத்து சுதந்திரம் பறிக்கப்பட்டுவிட்டது. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேட்கிற கேள்விகளுக்கு அமைச்சர்களைவிட சபாநாயகர்தான் அதிகமாகப் பதில் சொல்கிறார். சபாநாயகர் நடுநிலையாகச் செயல்படவில்லை” என்று தெரிவித்துவிட்டு, ஜூஸ் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb