நியூயார்க்: பூமியில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவில் விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது சர்வதேச விண்வெளி நிலையம். அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியை எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் வசம் ஒப்படைத்துள்ளது நாசா.
இந்தப் பணிக்காக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சுமார் 843 மில்லியன் டாலர்களை பெறுகிறது. விண்வெளியில் உலா வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை சிக்கலின்றி பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தும் பணிக்காக பிரத்யேக விண்கலன் (DeOrbit Vehicle) ஒன்றை ஸ்பேஸ்எக்ஸ் கட்டமைக்க உள்ளது. அதற்கு தான் இந்த தொகை.
அந்த விண்கலனை கொண்டு பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையம் அப்புறப்படுத்தப்படும். அதன் பின்னர் அந்த விண்கலனும், சர்வதேச விண்வெளி நிலையமும் வளிமண்டலத்தில் நுழையும் போது அவை இரண்டும் உடைந்து எரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நாசா உறுதி செய்துள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையம்: கடந்த 1998-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது சர்வதேச விண்வெளி நிலையம். அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் இணைந்து இதனை பராமரித்து வருகின்றன. உலக நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இங்கு தங்கியிருந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள். வரும் 2028-ம் ஆம் ஆண்டுடன் ரஷ்யா இதிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ளது.
இதன் மிஷன் வரும் 2030-ம் ஆண்டுடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில்தான் நாசா இதனை அப்புறப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது ஸ்பேஸ்எக்ஸ் இதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.