இந்தியாவில் சாதி ஆணவக் கொலைகள் தொடர்ச்சியாக நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்துவருகிறது. குறிப்பாக, கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் 150-க்கும் மேற்பட்ட சாதி ஆணவப் படுகொலைகள் நிகழ்ந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பின்னணியில்தான், சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு தனிச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாட்டில் எழுந்திருக்கிறது.
நம் நாட்டில், தங்களுடைய வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதற்கான உரிமையை ஒவ்வொருவருக்கும் சட்டம் வழங்கியிருக்கிறது. ஆனால், அந்த உரிமை சாதியின் பெயரால் பறிக்கப்படும் கொடுமை நம் சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தங்களுடைய சொந்த விருப்பத்தின் அடிப்படையில் வாழ்க்கையை இணையைத் தேர்வுசெய்யும் இளம் தம்பதிகள் கொலை செய்யப்படுகிறார்கள்.
சாதிய அமைப்புகளும், சாதி ரீதியில் செயல்படும் அரசியல் இயக்கங்களும் இதன் பின்னால் இருக்கின்றன. சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் இளம் தம்பதிகள் கௌரவம், சாதித் தூய்மை என்ற பெயரால் படுகொலை செய்யப்படுகிறார்கள். இத்தகைய கொலைகள், இது தொடர்புடைய குற்றங்களுக்கு தண்டனை வழங்கக்கூடிய சட்டம் இந்தியாவில் இல்லை. ஆகவேதான், சாதி ஆணவக் கொலை உள்ளிட்ட குற்றங்களுக்கு தனியாக சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்திவருகின்றன.
சாதி ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கு தனிச்சட்டம் கொண்டுவர வேண்டுமென்று சி.பி.எம்., சி.பி.ஐ., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் தமிழக சட்டமன்றத்தில் பல முறை எழுப்பியிருக்கின்றன. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதும், சட்டமன்றத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது.
ஸ்டாலின் முதல்வராக வந்த பிறகும், தனிச்சட்டம் தொடர்பான கோரிக்கை எழுப்பப்பட்டு அது தொடர்பான விவாதங்கள் சட்டமன்றத்தில் நடைபெற்றன. சமீபத்தில், சாதிமறுப்பு தம்பதிக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக, திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் சூறையாடப்பட்ட சம்பவம், தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற கூட்டத் தொடரில், சி.பி.எம் அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது, காங்கிரஸ், சி.பி.எம்., சி.பி.ஐ., ம.தி.மு.க., வி.சி.க., த.வா.க., ம.ம.க, பா.ஜ.க ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் சி.பி.எம் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதில், பாட்டாளி மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசியக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் கலந்துகொள்ளவில்லை.
கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட அரசுத் தரப்பில் பிரத்யேக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள். இதுபோன்ற குறற்ங்களில் இனிமேல் காவல் ஆய்வாளர்களுக்கு பதிலாக, காவல் துணைக் கண்காணிப்பாளர் விசாரணை அலுவராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
‘சாதி ஆணவக் கொலை உள்ளிட்ட குற்றங்களைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்ற கோரிக்கைக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், ‘தனிச்சட்டம் கொண்டுவருவதைவிட, நடைமுறையில் இருக்கும் சட்டப்பிரிவுகள், குறிப்பாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் தீவிரமான வேகமான நடவடிககள் எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது என்று இந்த அரசு கருதுகிறது’ என்றார்.
அதாவது, சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் தேவையில்லை என்ற நிலைப்பாட்டை தி.மு.க அரசு எடுத்திருக்கிறது என்று இதன் மூலம் தெரிகிறது. இந்த நிலையில், முதல்வர் தனது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர் செல்லக்கண்ணு, பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், “சாதி ஆணவப்படுகொலைகளுக்கு எதிரான தனிச் சட்டம் தேவையில்லை என்று முதல்வர் பதிலளித்திருப்பது ஏற்புடையதல்ல. சாதி ஆணவக்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், தனிச் சட்டத்தின் தேவை முன்பைவிட அதிகரித்து வருகிறது.
சாதி மறுப்பு இணையர்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். தம்பதியினர் அல்லது அவருடைய உறவினர்களை ஊரைவிட்டு வெளியேற்றுதல், தண்டம் விதித்தல், சமூகப் புறக்கணிப்பு செய்தல், பொருளாதாரத் தடை விதித்தல், சொத்துக்கள் மீதான உரிமையை மறுத்தல் போன்ற கொடுங்குற்றங்களும் அரங்கேற்றப்படுகின்றன.
உடுமலை சங்கர் தொடங்கி பல்வேறு சாதி ஆணவப்படுகொலைகள் காவல் நிலையங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படாததால் நடந்திருக்கின்றன. எனவேதான், சிறப்புச் சட்டம் தேவைப்படுகிறது.
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய தம்பதியினர் வாய்மொழியாகவோ, எழுத்து மூலமாகவோ, காவல் நிலையத்திலோ, அல்லது அரசு அதிகாரியிடமோ ஒரு உறுதிமொழியை தெரிவித்த பின்பு அவர்களைப் பிரிப்பதற்கான நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபடக்கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிப்பதற்கு வகை செய்யப்பட வேண்டும். சாதி ஆணவக் கொலை உள்ளிட்ட குற்றங்களுக்கு தனிச்சட்டம் கட்டாயம் இயற்றப்பட வேண்டும்’ என்று அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
இந்நிலையில் திமுக-வின் கூட்டணி கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளனும் தனிச்சட்டம் வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார். அவர், “தமிழ்நாட்டில் ஆணவக் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இந்திய சட்ட ஆணையம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சிறப்பு சட்டம் ஒன்றைத் தமிழ்நாடு அரசு இயற்றவேண்டும்; அதுவரை உச்சநீதிமன்றம் 2018 இல் தனது ஆணையில் குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.” என நீண்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
எனினும் திமுக இந்த விவகாரத்தில் தனிச்சட்டம் தேவை இல்லை என்ற மனநிலையில் தொடருவதாகவே தெரிகிறது. கூட்டணி கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் கோரிக்கையை திமுக அரசு ஏற்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88