“ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணையை மறுத்தது ஏன்?” – எடப்பாடி பழனிசாமிக்கு கே.என்.நேரு கேள்வி

சென்னை: “ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணையை மறுத்து, அதற்குப் பதிலாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை ஏன் பழனிசாமி அமைத்தார்? அப்போது மட்டும் விசாரணை ஆணையம் தேவைப்பட்டதா? அன்றைக்கு நம்பகத்தன்மை பாதுகாக்கப்பட்டதா?” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் கே.என்.நேரு கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி விஷச் சாராய விவகாரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருக்கிறது அதிமுக ‘சிபிஐ விசாரணை வேண்டும்’ என்ற கோரிக்கையையும் வைத்திருக்கிறது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகேதான் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டிருகிறது. 7 ஆண்டுகளுக்கு முன்பு இதே ராஜரத்தினம் மைதானம் அருகே 2017 மார்ச் 8-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நடத்தினாரே, அது பழனிசாமிக்கு நினைவிருக்கிறதா? ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணை கேட்டுத்தான் அன்றைக்குப் பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருந்தார். இன்றைக்குப் பழனிசாமியோடு உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் சி.பொன்னையனிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும். ஏனென்றால் 2017-ல் பன்னீர்செல்வம் உண்ணாவிரதத்திலும் பங்கேற்றவர் பொன்னையன்.

அன்றைக்கு மோடியிடம் செல்வாக்கு பெற்றிருந்த பன்னீர்செல்வம் அணியினரின் கோரிக்கையை ஏற்று, சிபிஐ விசாரணையை அமைத்துவிடுவார்களோ என அஞ்சி, உடனே ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை உண்ணாவிரதத்துக்கு இரண்டு நாட்கள் முன்பு பழனிசாமி அரசு ஏன் அவசர அவசரமாக வெளியிட்டது?உண்ணாவிரதப் பந்தலில் பேசிய பன்னீர்செல்வம், “சிபிஐ விசாரணை நடந்தால் முதல் குற்றவாளி விஜயபாஸ்கர்தான். சிபிஐ விசாரித்தால்தான் ஜெயலலிதா மரணத்தின் மர்மம் வெளியே வரும்” என்றார். தலைவியின் மர்ம மரணத்தில் சிபிஐ விசாரணைக்கு அன்று முட்டுக்கட்டை போட்ட பழனிசாமி, இன்றைக்குக் கள்ளக்குறிச்சி விவகாரத்துக்கு சிபிஐ விசாரணை கேட்பதற்கு வெட்கமாக இல்லையா?



‘ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மாநிலங்களவையில் ஓபிஎஸ் அணி எம்.பிக்கள் ஜெயலலிதா படத்துடன் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு அன்றைக்கு அமளியில் ஈடுபட்டனர். ‘ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என வலியுறுத்தி ஓபிஎஸ் அணியின் 12 எம்.பிக்கள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் மனு அளித்தனர். இதற்கெல்லாம் ஒப்புக்கொள்ளாதவர்கள்தான் இன்றைக்கு சிபிஐ-யைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கோரிக்கை வைக்கிறார்கள்.

4,800 கோடி ரூபாய் நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு முந்தைய அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கு ஒப்பந்தப் பணிகள் முறைகேடாக அளிக்கப்பட்டன. அதுபற்றி ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறையிடம் அன்றைய எதிர்க்கட்சியான திமுக மனு அளித்தது. அதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்காததால் உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு போட்டது. அந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் 2018 அக்டோபர் 12-ம் தேதி உத்தரவிட்டதுமே திருடனுக்குத் தேள் கொட்டியது போல பழனிசாமி ஏன் பதறினார்?

உத்தரவு வெளியான அன்றைய தினமே அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் பொன்னையன், அதிமுக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் இன்பதுரை ஆகியோரைக் கூட்டாகப் பத்திரிகையாளர்களைச் சந்திக்க வைத்து, “சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்” என அவசர அவசரமாக ஏன் சொன்னார்?அன்றைக்கு சிபிஐ-க்குப் பதற்றம் அடைந்தவர் இன்றைக்கு சிபிஐ-க்குத் தம்பட்டம் அடிக்கிறார்.

அன்றைக்கு சிபிஐ-க்கு பயந்து உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிய பழனிசாமிதான், இன்றைக்குக் கள்ளக்குறிச்சி விவகாரத்துக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்கிறார். அன்றைக்குக் கசந்த சிபிஐ, இன்றைக்கு ஏன் இனிக்கிறது? “ஏன்யா நான் சரியாதான் பேசுறேனா” என ஒரு படத்தில் நடிகர் சங்கிலி முருகன் பேசும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. சசிகலா தயவில் முதல்வர் ஆனபோது ஒரு முகமும், மோடி தயவில் அந்த முதல்வர் பதவியைத் தக்கவைத்துக் கொண்டபோது இன்னொரு முகமும் காட்டிய இரட்டை வேடத்தைத்தான் இன்றைக்கு சிபிஐ விஷயத்திலும் காட்டுகிறார் கபடதாரி பழனிசாமி.

“கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்” எனப் பிதற்றியிருக்கிறார் பழனிசாமி. அவருடைய பொறுப்பில் கட்சி வந்த பிறகு ஒரு தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியைச் சேர்த்தால் தொடர்ந்து 9 தோல்விகளைச் சந்தித்த வரலாற்றுப் பெருமைக்குரிய பழனிசாமிக்குப் பித்தம் தலைக்கு ஏறிவிட்டது. அதனால்தான் முதல்வரை ராஜினமா செய்யச் சொல்கிறார். பழனிசாமி அவர்களே, உங்கள் முதுகைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். கறை படிந்த வரலாறு தெரியும்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய 13 அப்பாவிகளைத் துள்ள துடிக்கத் தூத்துக்குடியில் சுட்டுக் கொன்றது உங்கள் ஆட்சியில்தானே, அப்போது நீங்கள் ராஜினாமா செய்தீர்களா? பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான இளம் பெண்களைக் கடத்திக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் அதிமுக நிர்வாகி அருளானந்தம் கைதானபோது அபலைகளின் கண்ணீரைத் துடைக்க முதல்வர் நாற்காலியைத் துறந்தீர்களா? முதல்வராக இருந்த ஜெயலலிதா வாழ்ந்த கொடநாட்டிலேயே கொலை, கொள்ளைகள் நடந்தபோது, தலைவி வாழ்ந்த இல்லத்தின் ரத்தக் கறையைத் துடைக்க பதவியைத் தூக்கியெறியாமல் இருந்தது ஏன்?

குட்கா ஊழலில் உங்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டபோது பழனிசாமி பல்லையா குத்திக் கொண்டிருந்தார்?சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் லாக்அப்பில் கொல்லப்பட்டு, காவல்நிலையம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டபோது காவல்துறைக்குப் பொறுப்பு வகித்த பழனிசாமி ராஜினாமா செய்தாரா? முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் எனச் சொல்ல உங்களுக்கு அருகதை இருக்கிறதா?

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நீதிபதி கோகுல்தாஸ் விசாரணை ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்திருக்கிறது. ஆனால், “ஒரு நபர் ஆணையம் அமைத்தாலும் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை ஏற்படாது” என்று சொல்கிறார் பழனிசாமி. ஜெயலலிதா மரணத்துக்கு சிபிஐ விசாரணையை மறுத்து, அதற்குப் பதிலாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை ஏன் பழனிசாமி அமைத்தார்? அப்போது மட்டும் விசாரணை ஆணையம் தேவைப்பட்டதா? அன்றைக்கு நம்பகத்தன்மை பாதுகாக்கப்பட்டதா? விஷச் சாராயம் நிச்சயம் தடுக்கப்பட வேண்டும். அதில் யாருக்குமே மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஆனால், இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் விஷச் சாராய மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதில், தமிழகம் கடைசி இடங்களில்தான் இருக்கிறது. மத்திய அரசின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) அறிக்கையின்படி, 2017-ல் 1,497 கள்ளச் சாராய வழக்குகள் பதிவாகி, 1,510 பேர் உயிரிழந்தனர். அதிகபட்சமாகக் கர்நாடகாவில் 256 பேரும் மத்தியப் பிரதேசத்தில் 216 பேரும், ஆந்திராவில் 183 பேரும், பஞ்சாபில் 170 பேரும், ஹரியானாவில் 135 பேரும், புதுச்சேரியில் 117 பேரும் சத்தீஸ்கரில் 104 பேரும் உயிரிழந்துள்ளனர்.

2018-ல் 1,365 பேர் கள்ளச் சாராயத்தால் இறந்தனர். இதில், அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 410 பேரும் கர்நாடகாவில் 218 பேரும், அரியானாவில் 162 பேரும், பஞ்சாபில் 159 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 78 பேரும், சத்தீஸ்கரில் 77 பேரும், ராஜஸ்தானில் 64 பேரும் உயிரிழந்தனர். 2019-ல் கள்ளச் சாராயத்தால் நாட்டில் 1,296 பேர் இறந்தனர். கர்நாடகாவில் கலப்பட சாராயம் குடித்து அதிகபட்சமாக 268 பேர் உயிரிழந்தனர்.

பஞ்சாப்பில் 191 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 190 பேரும், சத்தீஸ்கரில் 115 பேரும், அசாமில் 98 பேரும், ராஜஸ்தானில் 88 பேரும் உயிரிழந்தனர். 2020-ல் கரோனா பரவிய காலத்திலும் கூட கள்ளச் சாராய மரணங்கள் நடந்தன. நாடு முழுவதும் 931 கள்ளச் சாராய வழக்குகள் பதிவாகி 947 பேர் உயிரிழந்தனர். அப்போது அதிகபட்சமாக மத்தியப் பிரதேசத்தில் 214 பேரும், ஜார்க்கண்டில் 139 பேரும், பஞ்சாப்பில் 133 பேரும், கர்நாடகாவில் 99 பேரும், சத்தீஸ்கரில் 67 பேரும் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தனர்.

2021-ல் இந்தியா முழுவதும் 708 சட்டவிரோத போலி மது அருந்திய சம்பவங்கள் நடந்தன. அதில் 782 பேர் இறந்து போனார்கள். இந்த மரணத்தில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 137 பேரும் பஞ்சாபில் 127 பேரும் மத்தியப் பிரதேசத்தில் 108 பேரும் கர்நாடகாவில் 104 பேரும் ஜார்க்கண்டில் 60 பேரும், ராஜஸ்தானில் 51 பேரும் இறந்தார்கள். இந்தப் புள்ளிவிவரங்கள் பார்த்தால் மற்ற மாநிலங்களைவிடத் தமிழகம் அவ்வளவு மோசமான இடத்தில் இல்லை.

இருந்தாலும் விஷச் சாராயம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கள்ளச் சாராயம் குடித்து மரணங்கள் நடப்பது திமுக ஆட்சியில் மட்டும்தான் என்பது போல அதிமுக பேசி வருகிறது. ஜெயலலிதா ஆட்சியில் 2001-ல் பண்ருட்டியில் கள்ளச் சாராயத்துக்கு 52 பேர் பலியானார்கள். அதன் பிறகு அதே ஆண்டில் காஞ்சிபுரம், செங்குன்றம் பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி 30 பேருக்கு மேல் இறந்தார்கள். 1993 ஜனவரியில் விழுப்புரம் அருகே சித்தலிங்கமடம் கிராமத்தில் விஷச் சாராயம் குடித்து 9 பேர் இறந்தார்கள்.

அதே ஆண்டு டிசம்பரில் திருத்தணி அருகே திருவாலங்காடு பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி 7 பேர் பலியானார்கள். 1996 ஜனவரியில் திருச்சி உறையூரில் விஷச் சாராயம் அருந்தி 10 பேர் பலியானார்கள். அப்போதெல்லாம் கள்ளச் சாராயத்தைத் தடுக்க அன்றைய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால், அதற்காக முதல்வர் பதவியை ஜெயலலிதா ராஜினாமா செய்யவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களிலும் இப்படியான கள்ளச்சாராய மரணங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன.

அதற்காக அந்த மாநில முதல்வர்கள் எல்லாம் ராஜினாமா செய்துவிட்டார்களா? குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் மஜுர்காம், நகவ் பகுதிகளில் 2009 ஜூலையில் கள்ளச் சாராயத்துக்கு 136 பேர் பலியானபோது அங்கே மோடிதான் முதலமைச்சராக ஆட்சி செய்து கொண்டிருந்தார். உள்துறை அமைச்சராக இருந்தவர் அமித் ஷா. அவர்கள் இருவரும் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று ராஜினாமா செய்தார்களா?

மக்களின் நம்பிக்கையை முழுவதுமாக இழந்து தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் பழனிசாமி, சொந்தக் கட்சியினரிடமும் செல்வாக்கை இழந்துவிட்டார். இதனைத் திசைதிருப்பி, தனது இருப்பைத் தக்கவைக்கத்தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டுமென வீராவேசம் காட்ட முயற்சி செய்துகொண்டிருக்கிறார். யார் காலையும் பிடித்து முதல்வர் ஆனவர் அல்ல எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் பேராதரவுடன் ஆட்சி செய்து, தமிழகத்தை முன்னேற்ற நாளும் செயல்பட்டு வருகிறார். ஆகவே, பகல்கனவைக் காணுவதைப் பழனிசாமி நிறுத்திவிட்டு, பாஜகவிடம் அடகு வைக்கப்பட்டு, தற்போது மூழ்கும் கப்பலாக உள்ள தனது கட்சியைப் பற்றிக் கவலைப்படும் வேலையைப் பார்க்கலாம் என்று தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.