புதுடெல்லி: தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பதிவான கனமழை காரணமாக அங்கு நிலவிய வெப்பம் தணிந்துள்ளது. இதனால் டெல்லி வாழ் மக்களும் மகிழந்துள்ளனர்.
டெல்லியின் சரிதா விஹார், முனிர்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகி உள்ளது. வானிலை ஆய்வு மைய தகவலும் இந்த மழை தொடரும் என உறுதி செய்துள்ளது. காலை 9 மணி அறிக்கையின் படி இடியுடன் கூடிய மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 20 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, புதன்கிழமை அன்று வெளியான வானிலை அறிக்கையில் குறைந்தபட்சம் 29 முதல் அதிகபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை இன்று டெல்லியில் வெப்பம் நீடிக்கும் என கணிக்கப்பட்டு இருந்தது. இந்தச் சூழலில் டெல்லியில் பரவலாக மழை பதிவாகி உள்ளது. சில இடங்களில் மழை நீரால் சூழப்பட்டுள்ள சாலைகளை வாகன ஓட்டிகள் கடந்து சென்றனர்.
கடந்த சில வாரங்களாக டெல்லி மற்றும் வட இந்திய மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதீதமாக இருந்து வருகிறது. டெல்லியில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளில் ஏசி இயந்திரத்தை பயன்படுத்த வேண்டிய சூழலில் இருந்தனர். இதன் காரணமாக மின்சார கட்டணமும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், மக்கள் தண்ணீர் பற்றாக்குறையையும் எதிர்கொண்டனர்.
இந்தச் சூழலில் டெல்லியில் பருவமழையை இந்த வாரத்தின் இறுதியில் எதிர்பார்க்கலாம் என தனியார் வானிலை முகமை தெரிவித்துள்ளது. ஜூன் 29 அல்லது 30 முதல் டெல்லியில் பருவமழை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்யவில்லை. அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை அங்கு ஜூன் இறுதி வாரத்தில் தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.