போடி: தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகையின் துணை ஆறுகளில் நீர்ப்பெருக்கு அதிகரித்துள்ளது.
வைகை அணை மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகின்றன. வைகை அணைக்கு முக்கிய நீராதாரமாக மூலவைகை மற்றும் முல்லை பெரியாறு அணை நீர் உள்ளன.இதில், வைகையின் துணை ஆறுகளாக கொட்டக்குடி, பாம்பாறு, வராகநதி, மஞ்சளாறு, சுருளியாறு உள்ளிட்ட ஆறுகள் உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையானது சிற்றாறுகளாக பெருக்கெடுத்து வைகையின் நீர்வளத்தை அதிகரிக்கின்றன.
கடந்த சில மாதங்களாக மழையில்லாததால் துணை ஆறுகள் வறண்டே கிடந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் கொட்டக்குடி, வராகநதி உள்ளிட்ட பல்வேறு துணை ஆறுகளில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை அணைக்கு கடந்த 16-ம் தேதி விநாடிக்கு 46 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜூன் 27) 895 கன அடியாக அதிகரித்துள்ளது.
தற்போது நீர்மட்டம் 48.5 அடியாகவும், நீர் வெளியேற்றம் 69 கன அடியாகவும் உள்ளது. துணை ஆறுகளில் இருந்து மட்டுமல்லாது முல்லை பெரியாறு அணையில் இருந்தும் விநாடிக்கு 1,089 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் வைகை அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “தற்போது சாரல் மழை தொடர்வதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பாசனத்துக்கான நீர் தேவை குறைந்துள்ளதால் தற்போது குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் அணையில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது” என்றனர்.