‘கில்லி’ ரீ-ரிலீஸ் ஹிட் ஆட்டத்தைத் தொடர்ந்து `போக்கிரி’, `பூவே உனக்காக’, `காதலுக்கு மரியாதை’, `துள்ளாத மனமும் துள்ளும்’ என மெகா ஹிட் அடித்த படங்கள் எப்போது ரீ-ரிலீஸ் என உற்சாகத்தோடு காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
விஜய்யின் சினிமா என்ட்ரிக்குப் பிறகு ஒரு நடிகராக அவருக்கு மாபெரும் அடையாளத்தைக் கொடுத்த படம் ‘பூவே உனக்காக’. அந்தப் படம் உட்பட ‘லவ் டுடே’, ’துள்ளாத மனமும் துள்ளும்’, ‘திருப்பாச்சி’, ’ஜில்லா’, ’ஷாஜகான்’ என விஜய் கரியரில் முக்கியமான ஆறு வெற்றிப் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரியிடம் ’பூவே உனக்காக’ படம் ரீ-ரிலீஸ் எப்போது என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன் வைத்தேன்…
“எல்லோருமே ‘பூவே உனக்காக’ ரீ ரிலீஸுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்காங்க. மக்கள் மத்தியில பரவலான முன்னணி ஹீரோவாக விஜய் பேசப்படக் காரணமே ’பூவே உனக்காக’ படம்தான். அதுக்கு முன்னாடி அவருக்கு சரியான கதைகள் அமையாம போயிருக்கலாம். ஆனா, ’பூவே உனக்காக’ தமிழ்நாட்டு மக்கள் தூக்கி வெச்சி கொண்டாடுற அளவுக்கு ஆக்கிடுச்சு.
விஜய்க்கு ஆக்டிங் கெப்பாசிட்டி இருந்துச்சு. நடிப்பு மேல ஃபயரும் காதலும் இருந்துக்கிட்டே இருந்துச்சு. ஆனா, ’பூவே உனக்காக’ படம்தான் அவர் அதை நிரூபிக்கிறதுக்கான களமா அமைஞ்சது. பட வெற்றிக்கு பிறகு விஜய், அவரோட அப்பா சந்திரசேகர், அம்மா ஷோபாவோடு என் ஆபிஸ் வந்திருந்தார்.
படம் இந்தளவுக்கு ரீச் ஆனதுல விஜய்யோட அப்பா, அம்மா ரெண்டு பேருக்குமே ரொம்ப சந்தோஷம். ‘பிராமிஸ் பண்றோம் சார். மற்றவங்களுக்கு எப்படித் தேதி கொடுக்கிறோம்னு தெரியாது. ஆனா, உங்களுக்கு வருடத்துக்கு ஒரு படத்துக்கான கால்ஷீட் கொடுக்கிறோம்’னு சொன்னாங்க. முன்பு வருசத்துக்கு நாலஞ்சு படங்கள் பண்ணினார் விஜய். இப்போ, வருசத்துக்கு ஒரு படம்தான் பண்றார். எனக்கு 6 படங்கள் பண்ணினார். எல்லாமே பெரிய ஹிட். அவர் என் மீது வைத்திருந்த அன்பு, மரியாதை, பாசம் எல்லாமே இப்போவரைக்கும் அப்படியே இருக்கு. கொஞ்சம்கூட குறையல. அவர் மாறவே இல்ல. ஒரு படத்துல கமிட் ஆகிட்டார்ன்னா தேவையில்லாம இயக்குநர்களின் பணியில தலையிட மாட்டார். அவர் உண்டு அவர் வேலை உண்டுன்னு அமைதியா ஒர்க் பண்ணுவார்.
சிலர் அதை மாற்றுங்க, இதை மாற்றுங்கன்னு சொல்லுவாங்க. ஆனா, விஜய் அப்படி கிடையாது. கமிட் ஆகுறதுக்கு முன்னாடியே எதுவா இருந்தாலும் ஓப்பனா சொல்லிடுவாரு, கமிட் ஆன பிறகு எந்தத் தொந்தரவும் செய்யமாட்டார். அவர் இயக்குநர்களின் ஹீரோ மட்டுமில்ல, தயாரிப்பாளர்களின் ஹீரோ. லீவு வேணும், ஏதாவது வெளியில போறார்ன்னா அதைக்கூட முன் கூட்டியே சொல்லி தயார்ப்படுத்திடுவார். அதேமாதிரி ஷூட்டிங்குக்கும் சரியான நேரத்துல வந்துடுவாரு. 9 மணின்னா ஷார்ப்பா 9 மணிக்கு வந்து நிற்பார். அப்படியொரு நபரைப் பார்க்கவே முடியாது.
என் மேல எந்தளவுக்கு மதிப்பும் மரியாதையும் வெச்சிருக்கார்ன்னா, 96வது 97வது படம் தயாரிச்சுக்கிட்டிருக்கேன். சீக்கிரம் 100வது படத்துக்கு வாங்க சார். உங்களோட 100வது படத்துல நான்தான் நடிப்பேன்ன்னு சொன்னார். ஆனா, அதுக்குள்ள அவர் அரசியலுக்குள்ள போறதா அறிவிச்சிருக்காரு. எங்களுக்கு மட்டுமில்ல, திரைத்துறைக்கே பெரிய இழப்பு. நான் தயாரிக்கிற நூறாவது படத்துல அவர் நடிக்கமுடியாத அளவுக்கு இருக்காரேன்னு வருத்தம். அவர் சினிமாவுல அதிகம் சம்பாதிக்கக்கூடிய நடிகரா இருக்கார்.
இன்றைய தேதியில சினிமா துறையில ராஜாவாத்தான் இருக்காரு. எந்த ஒரு குறையும் அவருக்குக் கிடையாது. நல்லா சம்பாதிச்சுக்கிட்டிருக்கும்போதே அவர் அரசியலுக்கு வர்றார்ன்னா அப்போ மக்களை எந்தளவுக்கு நேசிப்பார்? முழுக்க முழுக்க சேவை பண்ணத்தான் அரசியலுக்கு வர்றார். எந்த பெனிஃபிட்டையும் அவர் எதிர்நோக்கல.
சினிமா மாதிரியே அரசியலிலும் சக்சஸ் ஆவார்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா, எப்போ என்ன நடக்கும்னு தெரியாது. திடீர்ன்னு அவர் மனசு மாறிக் கூடுதலா படங்களும் நடிக்கலாம். அப்படியிருந்தா, என்னோட 100வது படத்திலும் அவர் நடிக்கலாம். பார்ப்போம், என்ன நடக்குதுன்னு” என்பவரிடம் ”பூவே உனக்காக ரீ ரிலீஸ் எப்போது?” என்று கேட்டேன், “இதுவரைக்கும் எடுத்த 90 படங்களுக்கும் மேல நெகட்டிவ் எல்லாம் ரொம்ப பழசா இருக்கு. அது எல்லாத்தையும் டிஜிட்டலுக்கு ஏற்றமாதிரி புதிதாக மாற்றுகிற வேலை போய்ட்டிருக்கு.
’பூவே உனக்காக’ மட்டுமில்லாம, எங்க தயாரிப்புல பெரிய ஹிட் அடிச்ச இன்னும் சில படங்களையும் ரீ-ரிலீஸ் பண்ணலாம்னு திட்டமிட்டிருக்கோம். இன்னும் இரண்டு மாதங்களில் ‘பூவே உனக்காக’ கண்டிப்பா ரீ-ரிலீஸ் ஆகிடும். எங்க தயாரிப்பு மூலமா திறமையா இருக்கிறவங்களுக்கும் புதுமுகங்களுக்கும்தான் அதிகமா வாய்ப்பு கொடுத்திருக்கோம். கதையைத்தான் எப்போதுமே நான் ஹீரோவா நினைப்பேன். ‘பூவே உனக்காக’ படமே அப்படி நினைச்சு எடுக்கப்பட்டதுதான்” என்றார்.