போடி: தொடர் மழையினால் போடிமெட்டு மலைச்சாலையின் 11-வது கொண்டை ஊசி வளைவில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் ஒரு மணிநேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போடிமெட்டு – மூணாறு வழித்தடத்தில் இரவு நேரம் வாகனங்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் மாற்று வழியில் சென்றன.
தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் முக்கிய வழித்தடமாக போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. இச்சாலை போடி முந்தலில் இருந்து 20 கிமீ. தூரம் வரை 17 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ளது. இச்சாலையின் ஒருபக்கம் சரிவும், மறுபக்கம் உயர்ந்த பாறைகளாகவும் உள்ளன. தொடர் மழை பெய்யும் போதெல்லாம் இச்சாலையில் மண்சரிவு ஏற்படுகிறது. மேலும் மூடுபனியின் தாக்கமும் அதிகம் இருப்பதால் பகலிலும் முகப்புவிளக்குகளை எரியவிட்ட படி வாகனங்களை இயக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மழைகாலங்களில் இச்சாலையில் வாகன இயக்கம் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.
தற்போது இப்பகுதியில் தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் அதிகம் உள்ளது. போடிமெட்டுவில் இருந்து கேரள எல்லை தொடங்குவதால் கேரள பகுதியின் காலநிலை இந்த மலைச் சாலைகளிலும் தொடர்கின்றன. இதனால் இரவும், பகலும் போடிமெட்டு மலைச்சாலையில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 11-வது கொண்டை ஊசி வளைவில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இந்த பாறைகள் சாலையின் இடது பக்கத்தை வெகுவாய் ஆக்கிரமித்து விட்டன.
இதனால் கனரக வாகனங்கள் இந்த வளைவில் திரும்ப மிகவும் சிரமப்பட்டன. எதிரே வரும் வாகனங்களை நிறுத்த சமிக்ஞை கொடுத்துவிட்டு சாலையின் வலது பக்கமாகவே சிரமப்பட்டு கடந்து சென்றன. இதனால் வாகனங்கள் வரிசையாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் இயந்திரம் மூலம் இந்த ராட்சத பாறைகளை சாலையோரத்துக்கு நகர்த்தினர். இருப்பினும் அந்த இடத்தில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்புக்காக மணல்மூடைகளை அடுக்கி வைத்தனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், “மண் சரிவு ஏற்பட்டதும் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தி வாகனங்கள் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒதுக்கப்பட்ட பாறைகளையும், மண்திட்டுக்களையும் வனத்துறையினரின் அனுமதி இல்லாமல் எடுத்துச் செல்ல முடியாது. ஆகவே ஓரமாக குவித்து வைத்துள்ளோம்,” என்றனர்.
போடிமெட்டை கடந்து கேரளப் பகுதியான பூப்பாறை, தேவிகுளம், மூணாறு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்வதால் இதே நிலை நீடிக்கிறது. குறிப்பாக கேப்ரோடு பகுதியில் மண்சரிவு அபாயம் உள்ளதால், இந்தவழியே இரவு நேரத்தில் மூணாறு செல்ல அனைத்து வாகனங்களுக்கும் தடை விதித்து தேவிகுளம் சார்ஆட்சியர் ஜெயகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.ஆகவே இரவு நேரத்தில் வாகனங்கள் பூப்பாறையில் இருந்து ராஜகுமாரி, பள்ளிவாசல் வழியே மூணாறுக்கு மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன.