புதுடெல்லி: மலேசியாவின் பினாங் மற்றும் சவுதி அரேபியா தலைநகர் ரியாத்திலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை துவக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை நேரில் சந்தித்து ஐயுஎம்எல் எம்பியான நவாஸ்கனி மனு அளித்தார்.
இது குறித்து இன்று டெல்லியில் அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம் ராமநாதபுரம் எம்பியும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் துணைத் தலைவருமான கே.நவாஸ்கனி அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: “அதிகமாக வெளிநாடுகளில் பணிபுரிபவர்களையும், வெளிநாடுகளில் வணிகம் செய்பவர்களையும் கொண்ட மாவட்டம் ராமநாதபுரம். ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கு நெடுங்காலமாக கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறோம். எனது இந்த தொகுதியில் பிரசித்திப் பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இதற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து வந்து செல்கின்றனர்.
இந்தளவு முக்கியத்துவம் கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பது அவசியம் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கின்றோம். கடந்த 17-வது மக்களவையில் நாடாளுமன்றத்தில் நான் எழுப்பிய கேள்விக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சர் பதில் அளித்தார். அப்போது அவர், விரைவில் ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு விமானம் இயக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். ஆனால் அதற்கான ஆயத்த பணிகள் இன்னும் தொடங்கப்படாமலேயே இருக்கின்றது. எனவே, விரைந்து பணிகளை துவங்கி ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைத்து விமான சேவையை தொடங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
எனது தொகுதியைச் சேர்ந்த பலரும் மலேசியாவில் பணி புரிபவர்களாகவும், வணிகரீதியாக அங்கு வசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே அவர்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்கு வந்து செல்லும் வகையில் மலேசியா பினாங்கிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் சிரமத்தை போக்கும் வண்ணம் மலேசியா பினாங்கிலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அதேபோல, சவுதி அரேபியா தலைநகர் ரியாத்திலிருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. இதனால், அங்கு வசிக்கும் மக்களும் சிரமமின்றி சொந்த ஊருக்கு வந்து செல்ல விரும்புகின்றனர்.எனவே, சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இருந்தும் சென்னைக்கு நேரடி விமான சேவையை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், ” என்று அவர் தெரிவித்துள்ளார்.