“மூன்றில் ஒரு பங்கு பெண் பணியாளர்கள் திருமணமானவர்கள்” – ஃபாக்ஸ்கான் விளக்கம்

சென்னை: திருமணமான பெண்களை பணியமர்த்தவில்லை என்ற குற்றச்சாட்டை ஃபாக்ஸ்கான் இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும் நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணமான பெண்கள் என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையான ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்ற அனுமதிப்பதில்லை என்ற ஊடகச் செய்திகளை கவனத்தில் எடுத்துக்கொண்ட மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், இந்த செய்திகளின் பின்னணியில், விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறையிடம் கேட்டிருந்தது.

ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் போது, பாகுபாடு காட்டக்கூடாது என 1976-ம் ஆண்டின் சமவேலைக்கு சமஊதியம் சட்டத்தின் பிரிவு-5 தெளிவாக தெரிவிக்கிறது. இந்தச் சட்டத்தின் அம்சங்களை அமல்படுத்துதல் மற்றும் நிர்வகித்தலுக்கு உரிய அதிகாரம் கொண்டது மாநில அரசு என்பதால், அதனிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



இந்நிலையில், ஃபாக்ஸ்கான் இந்தியா இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த விளக்கத்தில், “நிறுவனத்தில் புதிதாக பணியமர்த்தப்பட்டவர்களில் 25% பேர் திருமணமான பெண்கள். மொத்தப் பெண் பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் திருமணமானவர்கள் என்பதே இதன் அர்த்தம். அதுமட்டுமில்லாமல், நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 70% பெண்களே. 30% மட்டுமே ஆண்கள். நிறுவனத்தில் வேலை கிடைக்காத சிலர் இதுபோன்ற வதந்திகளை பரப்பியிருக்கலாம்.

நாட்டிலேயே பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலையாக தமிழகத்தில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான் இந்தியா உருவெடுத்துள்ளது.” என்று விளக்கம் அளித்துள்ளது.

இதேபோல், ஆலையில் பணியாற்றும் பணியாளர்கள் எந்த அடையாள சின்னங்களையும் அணிய தடை விதிக்கப்பட்டிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள ஃபாக்ஸ்கான் இந்தியா, “மதம் சார்ந்து இந்த தடை விதிக்கப்படவில்லை. இது பாதுகாப்பு காரணமாகவே விதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி நிறுவனம் என்பதால், பணியாளர்கள் எந்தவித உலோகங்களையும் அணியக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து மதத்தினருக்கும் இந்த தடை விதிக்கப்படுகிறது. பல நிறுவனங்களில் இதுபோன்ற நடைமுறை வழக்கத்தில் உள்ளது” என்று விளக்கம் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.