விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13-ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என அறிவித்ததால் மும்முனைப் போட்டி நிலவுகிறது. நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. சுயேச்சைகள் உள்பட 29 வேட்பாளர்கள் களத்தில் இருந்தாலும் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
திமுக: விக்கிர வாண்டி அருகே அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா என்கிற சிவ சண்முகம். 03.04.1971-ல் பிறந்த இவர், பி.ஏ., படித்துள்ளார். 1987-ம் ஆண்டு திமுகவில் இணைந்து, 1989-ல் இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும், 1996-ம் ஆண்டு அன்னியூர் கூட்டுறவு வங்கித் தலைவராகவும், 2002-ம் ஆண்டு ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக் குழு உறுப்பினராகவும், 2020-ம் ஆண்டு மாநில விவசாய அணி துணைஅமைப்பாளராகவும் இருந்துள்ளார்.
தற்போது திமுகவில் விவசாய தொழிலாளர் அணி செயலாளர் பொறுப்பில் உள்ளார். இவர் இதுவரை உள்ளாட்சித் தேர்தல் உட்பட மக்களால் தேர்வு செய்யப்படும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடாமல் நேரடியாக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறார். இவருக்கு வனிதா என்ற மனைவியும், அர்ஷிதா சுடர் என்ற மகளும், திரிலோக் ஹரி என்ற மகனும் உள்ளனர்.
பாமக: விழுப்புரம் அருகே பனையபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சி.அன்புமணி (66). 1983-ம் ஆண்டு வன்னியர் சங்க கிளை செயலாளராக பதவி வகித்தார். தொடர்ந்து வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர், மாவட்டத் தலைவர், மாநிலத் துணைத்தலைவர் என சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்டபோது பாமக வேட்பாளராக விக்கிரவாண்டி தொகுதியில் களம் கண்ட சி.அன்புமணி, அத்தேர்தலில் 41,428 வாக்குகளை பெற்று மூன்றாமிடம் பெற்றார். விக்கிரவாண்டி அருகே டி.கொசப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் அபிநயா. ஓமியோபதி மருத்துவம் படித்துள்ள இவர், 13.6.1995-ல் பிறந்தார். இவருடைய தந்தை காமராஜ் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார்.
நாம் தமிழர் கட்சி: அபிநயா, நாம் தமிழர் கட்சியில் கடந்த 2018-ல் உறுப்பினராக சேர்ந்து பணியாற்றி வருகிறார். இவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டார். தற்போது 2-வது முறையாக தேர்தலில் களம் காண்கிறார். இவருக்கு கடந்த 2022-ல் திருமணம் நடந்தது. இவருடைய கணவர் பொன்னிவளவன் விவசாயம் செய்து வருகிறார்.
தற்போது அபிநயா, விழுப்புரம் அருகே பில்லூர் கிராமத்தில் வசித்து வருகிறார். அதிமுக இத்தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்திருப்பதால், இத்தொகுதியில் திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.