பீகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் அலைக்கற்றையை ஜியோ நிறுவனம் ஏலத்தில் எடுத்திருக்கிறது.
அலைப்பேசி சேவைகளுக்கான 10-வது அலைக்கற்றை ஏலம் தொடங்கி இருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் – ஐடியா ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளன. ரூ.96,238 கோடி அடிப்படை மதிப்பிலான 10,500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டு உள்ளது. 800, 900, 1800, 2100, 2300, 2500, 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் என 8 பிரிவுகளில் அலைக்கற்றை ஏலம் விடப்பட்டிருக்கிறது.
இந்த ஏலத்தில் முதன்முறையாக 5ஜி சேவைகளுக்கான ரேடியோ அலைகளும் இடம்பெற்றன. இந்நிலையில் ஜியோ நிறுவனம் பீகாரில் 5.0 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ரூ.420.25 கோடிக்கும், மேற்குவங்கத்தில் 9.4 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ரூ.553.38 கோடிக்கும் ஏலத்தில் வாங்கி இருக்கிறது. மொத்தம் 14.4 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை 973.63 கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான ஆகாஷ் அம்பானி, “ஏற்கனவே டிஜிட்டல் இந்தியாவில் அதிவேகமான 5ஜி இணையசேவையை வழங்கி வருகிறோம்.
இந்த புதிய அலைக்கற்றையை ஏலத்தில் எடுத்தது எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இது எங்களுக்கு சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை உறுதி செய்வதற்கு தொடர்ந்து உதவியாக இருக்கும். ஜியோவின் டிஜிட்டலின் நன்மைகளை ஒவ்வொரு இந்தியரும் பெற வேண்டும்.” என்று கூறியிருக்கிறார்.