தமன்னா பற்றி பள்ளிப் பாடப்புத்தக்கத்தில் சேர்க்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ், தெலுங்கு படங்களைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் கால்பதித்து பிசியாக நடித்து வருகிறார் நடிகை தமன்னா. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிப்படங்கள் கொடுத்திருக்கிறார்.
அண்மையில் அவரது நடிப்பில் வெளியான ‘அரண்மனை 4 ‘ திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் தமன்னா பற்றி பள்ளி பாடப்புத்தக்கத்தில் இடம்பெற்ற விவகாரம் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஹெப்பால் பகுதியில் தனியார்ப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சிந்தி மக்களின் வாழ்க்கை என்ற தலைப்பின் கீழ் தமன்னாவைப் பற்றிய வாழ்க்கை குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்குத் தெரியவரவே, அவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கின்றனர். நடிகை தமன்னா குறித்து தங்கள் குழந்தைகள் கற்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
இது தொடர்பாகக் கர்நாடகாவில் உள்ள ஆங்கில வழி பள்ளி நிர்வாகங்களுக்கான சங்கத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து விசாரணை நடைபெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் வைரலாக அந்த தனியார்ப் பள்ளிக்கு எதிராகப் பலரும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.