புதுடெல்லி: தேர்தலில் மக்கள் அளித்த செய்தியை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொள்ளவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில இதழுக்கு அவர் அளித்துள்ள கட்டுரையின் சுருக்கம்: ஜூன் 4, 2024 அன்று, நம் நாட்டின் வாக்காளர்கள் தெளிவான, உறுதியான தீர்ப்பை வழங்கினார்கள். பிரச்சாரத்தின் போது தன்னை தெய்வீக அம்சம் கொண்டவராக காட்டிக்கொண்ட ஒரு பிரதமருக்கு இது தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மிக தோல்வி. தீர்ப்பின் செய்தி இதுமட்டுமல்ல. பிரிவினைவாத, வெறுப்பு அரசியலை இந்திய வாக்காளர்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிராகரித்துவிட்டார்கள் என்பதும், நரேந்திர மோடியின் ஆட்சியின் அர்த்தம் மற்றும் பாணி இரண்டையும் ஏற்க மறுத்துவிட்டார்கள் என்பதும் தீர்ப்பின் செய்தி.
ஆனால், எதுவும் மாறாதது போல் பிரதமர் செயல்படுகிறார். கருத்தொற்றுமையின் மதிப்பை அவர் போதிக்கிறார். ஆனால், மோதலையே ஊக்குவிக்கிறார். அவர் தேர்தல் முடிவைப் புரிந்து கொண்டார் என்பதற்கோ, கோடிக்கணக்கான வாக்காளர்களின் செய்தியை உள்வாங்கிக் கொண்டார் என்பதற்கோ எந்த ஆதாரத்தையும் பார்க்க முடியவில்லை. 18-வது மக்களவையின் முதல் சில நாட்கள் துரதிருஷ்டவசமாக ஊக்கமளிப்பதாக இல்லை. மாறிய மனப்பான்மையைக் காண்போம் என்ற நம்பிக்கை பொய்த்துப் போய்விட்டது. பரஸ்பர மரியாதையும், நட்புறவும் புதிய வடிவில் வெளிப்படும் என்ற நம்பிக்கையும் பொய்யாகிவிட்டது.
ஒருமித்த கருத்துடன் சபாநாயகரை தேர்வு செய்வோம் என பிரதமரின் சார்பில் பேசியவர்கள் தெரிவித்தபோது, இண்டியா கூட்டணி என்ன கூறியது என்பதை வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். எங்கள் பதில் எளிமையானது மற்றும் நேரடியானது. நாங்கள் அரசாங்கத்தை ஆதரிக்கிறோம். ஆனால் மரபு மற்றும் பாரம்பரியத்தின்படி எதிர்க்கட்சி வரிசையில் உள்ள ஒரு உறுப்பினருக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரினோம். 17-வது மக்களவையில் அரசியலமைப்புச் சட்டப்படி துணை சபாநாயகர் பதவியை நிரப்பாத ஆட்சியால், எங்களின் இந்த நியாயமான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
அடுத்ததாக, அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட விவகாரம் பிரதமராலும், அவரது கட்சியினராலும் தோண்டி எடுக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டது. அதோடு, இவ்விஷயத்தில் சபாநாயகர் எடுத்த நிலைப்பாடு, பாரபட்சம் கொண்டதாகவும், அரசியலாகவும் இருந்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல், அதன் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் விழுமியங்கள் மீதான தாக்குதல், அவை உருவாக்கிய நிறுவனங்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் இந்த முயற்சி, நாடாளுமன்றத்தின் சுமூக செயல்பாட்டுக்கு நல்லதல்ல.
அவசரநிலை பிரகடனத்தை அடுத்து நடந்த தேர்தலில், 1977 மார்ச்சில் நம் நாட்டு மக்கள் ஒரு திட்டவட்டமான தீர்ப்பை வழங்கினர். அந்த தீர்ப்பு, தயக்கமின்றி, சந்தேகத்துக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குள், காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய தேர்தல் வெற்றியைப் பெற்றது. அதுபோன்ற ஒரு வெற்றியை மோடி மற்றும் அவரது கட்சி ஒருபோதும் பெற்றதில்லை. இவையெல்லாம் வரலாற்றின் ஒரு பகுதியாகும்.
நாம் முன்னோக்கி பார்க்க வேண்டும். நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிய 146 எம்.பி.க்கள் வினோதமான முறையிலும், முன் எப்போதும் இல்லாத வகையிலும் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். இதேபோல், எந்த விவாதமும் இல்லாமல் மூன்று குற்றவியல் நீதிச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. பல சட்ட வல்லுநர்கள், இந்த சட்டங்கள் குறித்து கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு இணங்க, தேர்தல் தீர்ப்புக்குப் பின்னர் முழுமையான நாடாளுமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படும் வரை அவை கைவிடப்படக் கூடாதா?
இதேபோல், வனப் பாதுகாப்பு சட்டம், நாடாளுமன்ற கூச்சல் குழப்பத்துக்கு மத்தியில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. கிரேட்டர் நிகோபார் திட்டம் நிறைவேற்றப்படுவதால், சுற்றுச்சூழல் மற்றும் மனிதாபிமான பேரழிவை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். முழு விவாதம் மற்றும் விவாதத்துக்குப் பிறகு ஒருமித்த கருத்துடன் சட்டங்களை நிறைவேற்றுவதற்கான பிரதமரின் விருப்பத்துக்கு அர்த்தம் கொடுக்கும் வகையில், இந்த சட்டங்கள் விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டாமா?
நமது லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்திய நீட் ஊழல் குறித்து, கல்வி அமைச்சர் அளித்த உடனடி பதில், அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பதுதான். தேர்வின்போது மாணவர்கள் மத்தியில் அது குறித்து கலந்துரையாடும் பிரதமர் மோடி, நாடு முழுவதும் பல குடும்பங்களை சீரழித்த வினாத்தாள் கசிவுகள் குறித்து வெளிப்படையாக மவுனம் சாதித்து வருகிறார். தவிர்க்க முடியாததால், ‘உயர் அதிகாரக் குழுக்கள்’ அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் உண்மையான பிரச்சினை என்னவென்றால், கடந்த 10 ஆண்டுகளில் என்சிஇஆர்டி, யுஜிசி போன்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்களின் தொழில்முறை ஆழமாக சேதமடைந்துள்ளன.
இதற்கிடையில், இந்தியாவின் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மற்றும் மிரட்டல் பிரச்சாரம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினரின் வீடுகளை வெறும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் புல்டோசர்களைக் கொண்டு இடித்து, கூட்டுத் தண்டனை வழங்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி, மக்கள் மீது திணித்த வகுப்புவாத தூண்டுதல் மற்றும் அப்பட்டமான பொய்களைப் பார்க்கும்போது, இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லைதான். தேர்தல் வெற்றி கை நழுவிப் போகிறது என்ற பயத்தில் ஆத்திரமூட்டும் வகையிலான பேச்சுக்களைப் பேசியவர் அவர்.
பிப்ரவரி 2022-ல், மணிப்பூரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உறுதியான பெரும்பான்மையைப் பெற்றன. ஆனால், 3 மாதங்களுக்குள் மணிப்பூர் பற்றி எரியத் தொடங்கியது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். மிகவும் உணர்ச்சிகரமான இந்த மாநிலத்தில் சமூக நல்லிணக்கம் சிதைந்துள்ளது. இருப்பினும், அந்த மாநிலத்திற்குச் செல்லவோ அல்லது அதன் அரசியல் தலைவர்களைச் சந்திக்கவோ பிரதமருக்கு நேரமோ அல்லது விருப்பமோ இல்லை. மணிப்பூரின் இரண்டு மக்களவைத் தொகுதிகளையும் பாஜக இழந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால், மணிப்பூரின் பல்வேறு சமூகங்களைச் சூழ்ந்துள்ள நெருக்கடியை மிகவும் உணர்ச்சியற்ற முறையில் கையாண்டது குறித்து பிரதமர் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை.
40 நாட்களுக்கும் மேலாக நடத்திய பிரச்சாரத்தில், பிரதமர் தன்னைக் குறைத்துக் கொண்டார். அவருடைய வார்த்தைகள் நமது சமூகக் கட்டமைப்புக்கும், அவர் வகிக்கும் பதவியின் கண்ணியத்துக்கும் மிகப் பெரிய தீங்குகளை விளைவித்துள்ளன. அனைவருடனும் சேர்ந்து அனைவருக்குமான வளர்ச்சி என உறுதி அளித்த பிரதமர், 400-க்கும் மேற்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று அழைப்பு விடுத்தபோது மக்கள் அதனை நிராகரித்தனர். அவர்களின் சக்திவாய்ந்த செய்தியை பிரதமர் சிந்தித்துப் பார்த்து, சுயபரிசோதனை செய்து அங்கீகரிக்க வேண்டும்.
அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை என்பதை இண்டியா கூட்டணி கட்சிகள் தெளிவுபடுத்தியுள்ளன. அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும், நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமாக செயல்படப் போவதாகவும், நாடாளுமன்றம் சார்பற்ற முறையில் நடத்தப்படுவதை விரும்புவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளனர். பிரதமரும் அவரது அரசும் இதற்கு சாதகமாக பதிலளிப்பார்கள் என்பது எங்கள் நம்பிக்கை. ஆனால், தொடக்கம் நன்றாக இல்லை.
எனினும், எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் நாடாளுமன்றத்தில் சமநிலையையும், செயல்திறனையும் மீட்டெடுக்க உறுதிபூண்டுள்ளோம். நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் தரப்பில் முன்வரிசையில் உள்ள தலைவர்கள், நாம் நமது ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்றும் வகையில் முன்னேறிச் செல்வார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம்.