புதுடெல்லி: ஓஎம்ஆர் தாள் தொடர்பான குறைகளை தெரிவிக்க தேர்வர்களுக்கு கால வரம்பு உள்ளதா என்று உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமையிடம் நேற்று கேள்வி எழுப்பியது.
நீட் தேர்வின் பதில் தாளான ஓஎம்ஆர் தாளின் நகலை தங்களுக்கு வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் தரப்பிலும், ஒரு தனியார் நீட் பயிற்சி மையம் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, எஸ்.வி.என்.பாட்டிஅமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பயிற்சி மையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் தேர்வெழுதிய சில மாணவர்களுக்கு இதுவரை ஓஎம்ஆர் தாள் நகல்கள் வழங்கப்படவில்லை என்று வாதிட்டார். அதற்கு நீதிமன்றம், ஒரு தனியார் பயிற்சி மையம் சட்டப்பிரிவு 32-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் எப்படி மனு சமர்ப்பிக்கலாம் என்று கேள்வி எழுப்பியது.
தேசிய தேர்வு முகமை சார்பில், ஓஎம்ஆர் தாள்கள் ஏற்கெனவே அதிகார்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ஓஎம்ஆர் தாள்களை மாணவர்களுக்கு வழங்க எத்தனை காலம் தேவைப்படும் என கேள்வி எழுப்பினர். ஓஎம்ஆர் தாள்கள் மீதான குறைகளை தெரிவிக்க ஏதேனும் கால வரம்பு உள்ளதா என மேலும் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த வழக்கில் தேசிய தேர்வுகள் முகமை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதுதவிர நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக கற்றல் செயலி நிறுவனத்தினால் தொடரப்பட்ட மனுவுக்கு தேசிய தேர்வு முகமை ஜூலை 8-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நேற்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஜூன் 4-ம் தேதி நீட் தேர்வின் முடிவுகள் வெளியானதிலிருந்தே அதில் வினாத்தாள் கசிவு, வெளிப்படைத்தன்மை இன்றி கருணை மதிப்பெண் வழங்கல், நம்ப முடியாத எண்ணிக்கையில் முழு மதிப்பெண் பெற்ற தேர்வர்கள், உச்சபட்ச கட் ஆப் மதிப்பெண் போன்றவை தொடர்பாக சர்ச்சைஎழுந்தது. இதனால் நீட் தேர்வின்ரேங்கிங் முறை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், தேர்வின் நம்பகத்தன்மை மீது கேள்வி எழுந்திருப்பதாகவும் தேர்வெழுதிய 2000 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து, 1,563 மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் நேரம் போதாமை என்ற காரணத்தினால் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாகத் தேசிய தேர்வு முகமை அளித்த விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகையில் சிபிஐயும் வழக்கை கையில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் எஸ்.வி.பாட்டி தேசிய தேர்வு முகமையில் செயல்பாடுகள் அடிப்படை மனித உரிமைகளை மீறும் விதமாக இருப்பதாகக் கேள்வி எழுப்பினர்.
ஏற்கெனவே உள்ள நீட் வழக்குகளுடன் மேலும் புதிதாக நேற்று விசாரணைக்கு வந்த மனுக்களையும் இணைத்து உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.