பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, ஹாசன் ஆகிய மாவட்டங்களில் இடங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்துவருகிறது. குடகு மாவட்டத்தில் தலக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி, வீராஜ்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இன்று அதிகாலை முதலே கனமழை தொடர்ந்து பெய்தது.
பள்ளிகளுக்கு விடுமுறை: பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நூற்றுக்கணக்கான மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. சுல்தான்நகர், மல்லிகார்ஜூன் நகர் ஆகிய இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டது. தொடரும் மழையால் காவிரி ஆற்றிலும் கன்னிகா ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திரிவேணி சங்கமத்தில் வெள்ளம் சூழ்ந்து கடல்போல காட்சியளித்தது.
மடிகேரி – பாகமண்டலா இடையிலான சாலையில் மழை நீர் வெள்ளம் போல கரைபுரண்டு ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இன்று குடகு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடக வானிலை ஆய்வு மையம், கடந்த 24 மணி நேரத்தில் பாகமண்டலாவில் 21 செமீ, மடிகேரியில் 15.8 செமீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பொழியும் என அறிவித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பு: குடகு மாவட்டத்தில் தொடரும் கனமழையால் காவிரியின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 856 கன அடியாக அதிகரித்தது. இதேபோல ஹாரங்கி அணைக்கு 4252, ஹேமாவதி அணைக்கு 1425 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் வயநாட்டில் பெய்துவரும் கனமழையால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூருவில் உள்ள கபினி அணைக்கு வினாடிக்கு 16 ஆயிரத்து 977 கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அந்த அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.