“சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பதே செல்வந்தர்கள்தான்… அதனால் பாதிக்கப்படுவது சாமானிய மக்களே!''

‘வனத்துக்குள் திருப்பூர்’ திட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளரும் கிளாசிக் போலோ நிறுவனத்தின் உரிமையாளருமான சிவராமின் மகள் அக்ஷயா மற்றும் அவிநாசி சுபம் டெக்ஸ் உரிமையாளர் ஈஸ்வரன் மகன் தினேஷ் ஆகியோரின் திருமண நிகழ்வு அண்மையில் திருப்பூரில் நடைபெற்றது.

திருமணத்தின் ஒரு பகுதியாக ‘இயற்கை வளங்களே ஆதாரம்.. மனதில் உள்ள கேள்விகள்.. மனம் திறந்த பதில்கள்’ என்ற தலைப்பில் சூழலியலாளர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கும் நடைபெற்றது.

பாமயன்

இதில் பேசிய பொதிகை சோலை கூட்டுப் பண்ணைய அமைப்பின் தலைவர் பாமயன், “இயற்கை விவசாயம் குறித்த பல்வேறு முரண்பட்ட கருத்துகளை மக்கள் கொண்டுள்ளனர். இயற்கை விவசாயம் செய்ததால்தான் நமது அண்டைநாடான இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது என்ற பேச்சு எழுகிறது. ஆனால், கியூபா நாட்டில் இயற்கை விவசாயம் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இயற்கை விவசாயத்தை அதற்குரிய நடைமுறைக்கு உட்பட்டு செயல்படுத்தும்போது, நிச்சயம் வெற்றி பெற முடியும்” என்றார்.

வெளிவாடுவாழ் தமிழர் நல வாரியத் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி பேசுகையில், “சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய கேடு விளைவிப்பது செல்வந்தர்கள், வசதி படைத்தவர்கள் தான். சாமானிய, சாதாரண மக்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், அதனால் பாதிக்கப்படுவது அவர்கள் தான். 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சங்க இலக்கியங்களில் சுற்றுச்சூழல் குறித்து பேசப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்காக தமிழகத்தில் உள்ள ஏராளமான அமைப்புகள் தொடர்ந்து, குரல் கொடுத்து வருகின்றன” என்றார்.

கோவை சதாசிவம், செந்தூர் பாரி, ஓசை காளிதாஸ் உள்ளிட்டோர்.

சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவம் பேசுகையில், ”பழங்குடியின மக்கள், மணமக்களை வாழ்த்தும் போது, இருவாச்சி பறவையைப் போல் வாழ வேண்டும் என்பார்கள். இருவாச்சி பறவைகள் மிகவும் பொறுப்புடன் தங்கள் குடும்பத்தை வழிநடத்தும் என்பதே அதற்கு காரணம். இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் செந்துார் பாரி பேசுகையில், “தண்ணீர்ப் பற்றாக்குறை உலக அளவில் மிக முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது. நம் நாட்டிலும் அந்த பிரச்னை உள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை மழைப்பொழிவு போதியளவு உள்ளது. ஆனால், அதற்கான மழைநீர் சேமிப்பு திட்டங்கள் இல்லை. நீர்நிலை பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நீர் சேமிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும். அப்போதுதான் அது சட்டமாக உருவெடுக்கும்” என்றார்.

ஓசை அமைப்பு நிறுவனர் காளிதாசன் பேசுகையில், “300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் உயிரினங்கள் தோன்றி விட்டன. 30 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூச்சி இனங்கள் வந்து விட்டன. 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பே ஊர்வன வந்துவிட்டன. ஆனால், 2-3 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான் மனித இனம் தோன்றியது. மனிதர்கள் இல்லாத உலகத்தில் பறவைகள், விலங்கினங்கள் வாழ்ந்து விடும். ஆனால் பறவைகள், விலங்குகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது” என்றார்.

சுந்தரராஜன்

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் பேசுகையில், “இன்றைய காலகட்டத்தில் உலக அளவில் எதிர்கொள்கிற முக்கியமான பிரச்னை காலநிலை மாற்றம் தான். புவி வெப்பம் அதிகரித்து வருகிறது. வெப்ப அலைகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதை இந்த ஆண்டு உணர்ந்தோம். காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற தகவமைப்பை ஏற்படுத்த உலக நாடுகள் தயாராகி வருகின்றன. அடுத்த தலைமுறைக்கு நல்லதொரு கால சூழ்நிலையை நாம் விட்டுச் செல்ல வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.