ராஞ்சி: நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
ராஞ்சியில் உள்ள பட்காய் என்ற பகுதியில் உள்ள ரூ.266 கோடி மதிப்பிலான 8.86 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை ஹேமந்த் சோரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. கடந்த ஜனவரி 31ம் தேதி நடத்தப்பட்ட 7 மணி நேர தொடர் விசாரணைக்குப் பிறகு, அவரை கைது செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதையடுத்து, ஆளுநரைச் சந்தித்து முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டார்.
ஹேமந்த் சோரனை கைது செய்த அமலாக்கத் துறை அவரை ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைத்தது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பானு பிரதாப் பிரசாத், முகமது சதாம் உசேன் மற்றும் அப்சர் அலி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு, நீதிபதி ரங்கோன் முகோபாத்யாய முன் விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கடந்த 13ம் தேதி இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். இன்று (ஜூன் 28) காலை ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ரங்கோன் முகோபாத்யாய உத்தரவிட்டார். இதையடுத்து இன்
று மாலை அவர் பிர்சா முண்டா மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார். வெள்ளைநிற பேன்ட் மற்றும் குர்தா அணிந்தவாறு வெளியே வந்த அவரை, சிறைச்சாலைக்கு வெளியே கூடி இருந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவர்களைப் பார்த்து இரு கைகளையும் உயர்த்தி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இந்த ஆண்டின் இறுதியில் ஜார்க்கண்ட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலையாகி இருப்பது அக்கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு ஜாமின் கோரி கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.