சென்னை: “தமிழகத்தில் நல்ல தலைவர்கள் தேவை. அது அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை” என்று நடிகர் விஜய் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியுள்ளது. மொத்தம் இரண்டு கட்டங்களாக விருது வழங்கும் விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட விருது வழங்கும் விழா திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தொடங்கியுள்ளது. இன்றைய விழாவில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
மாணவர்களுக்கு விருது வழங்குவதற்காக சரியாக 10 மணிக்கு விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய். தொடர்ந்து மாணவர்கள் உடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். முதல் ஆளாக நாங்குநேரியில் சாதிய ஆதிக்க தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை உடன் அமர்ந்து விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய், “நடந்து முடிந்த பொதுத்தேர்வுகளில் சாதனை படைத்த தம்பி, தங்கைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள். தமிழக வெற்றிக் கழகத்தின் தோழர்களுக்கும் பணிவான வணக்கங்கள். மீண்டும் ஒரு முறை எதிர்கால தமிழகத்தின் இளம் மாணவ, மாணவிகளான உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்களை பார்க்கும்போது ஒரு பாசிட்டிவ் பவர் கிடைக்கிறது.
இந்த மாதிரி விழாவில் ஒரு சில நல்ல விஷயங்களை தாண்டி வேறு ஏதும் சொல்ல தெரியவில்லை. நீங்கள் எல்லாருமே அடுத்தகட்டத்தை நோக்கி செல்கிறீர்கள். நீங்கள் என்னவாக வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும். உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, அனைத்து துறையும் நல்ல துறைதான். நீங்கள் எதை தேர்ந்தெடுக்கிறீர்களோ, அதில் உங்களது முழு ஆர்வத்தை, 100 சதவிகித உழைப்பை கொடுத்தால் வெற்றி நிச்சயம். அதனால் உங்களுக்கு பிடிச்ச துறையை தேர்ந்தெடுங்கள். பெற்றோர்கள், ஆசிரியர்கள் உடன் ஆலோசித்து முடிவெடுங்கள்.
உங்களுக்கு எனது ஒரு அறிவுரை. பொதுவாக ஒரு துறையை நாம் தேர்தெடுக்கும் அதில் தேவைகள் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்ப்போம். மருத்துவம், பொறியியல் மட்டும் தான் நல்ல துறை என்று சொல்ல முடியாது. நமது தமிழகத்தில் உலகத்தரத்திலான மருத்துவர்கள், பொறியியலாளர்கள் அதிகமாகவே உள்ளனர். நமக்கு எது அதிகமாக தேவைப்படுகிறது என்றால், அது நல்ல தலைவர்கள். அரசியல் ரீதியாக மட்டும் இதை சொல்லவில்லை.
ஒரு துறையில் சிறந்து விளங்கினால், அதன் தலைமையிடத்துக்கு நீங்கள் செல்ல முடியும். அதனை தான் இன்னும் நல்ல தலைவர்கள் தேவை என்றேன். அதுமட்டுமில்லை, எதிர்காலத்தில் அரசியலும் ஒரு தொழில் விருப்பமாக வர வேண்டும் என்பது எனது எண்ணம். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.
செய்தி என்பது வேறு, கருத்து என்பது வேறு. எது உண்மை, எது பொய் என்பதை ஆராய கற்றுக்கொள்ளுங்கள். அப்போது தான் உண்மையிலேயே நமது நாட்டில் என்ன பிரச்சினை, மக்களுக்கு என்ன பிரச்சினை, சமூக தீமைகள் பற்றி தெரியவரும். அதை தெரிந்துகொண்டால் ஒருசில அரசியல் கட்சிகள் செய்கின்ற பொய் பிரச்சாரங்களை நம்பாமல், நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க கூடிய நல்ல விசாலமான உலக பார்வை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். அது வந்துவிட்டாலே, அதைவிட ஒரு சிறந்த அரசியல் வேறு எதுவுமே இருக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.