சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தனது வேட்புமனுவை ஏற்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர் விடுத்த கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ஜூன் 14-ம் தேதி துவங்கிய வேட்புமனுத் தாக்கல் 21-ம் தேதி முடிவடைந்தது. இந்த தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த சிவகங்கையைச் சேர்ந்த ராஜமாணிக்கம் என்பவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
இதை எதிர்த்தும், தனது வேட்புமனுவை ஏற்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும் ராஜமாணிக்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி வாதிட்டார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்ஐன் ராஜகோபாலன், ராஜமாணிக்கம் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறைபாடுகள் இருந்ததால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாகவும், இது சம்பந்தமாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும் எனவும் விளக்கமளித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.