10 மணி நேரமாக நடந்த விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழா நிறைவு!

சென்னை: 10 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த விஜய்யின் கல்வி விருது வழங்கும் விழா நிறைவடைந்தது. அடுத்தக்கட்ட நிகழ்வு ஜூன் 3-ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 2-வது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. மொத்தம் இரண்டு கட்டங்களாக விருது வழங்கும் விழா நடக்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், முதல்கட்ட விருது வழங்கும் விழா திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் இன்று காலை தொடங்கியது.

இதில் மாணவர்களுக்கு விருது வழங்குவதற்காக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் சரியாக காலை 10 மணிக்கு நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு வந்தார். தொடர்ந்து மாணவர்கள் உடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். முதல் ஆளாக நாங்குநேரியில் சாதிய ஆதிக்க தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னத்துரை உடன் அமர்ந்து விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.



இந்நிகழ்வில் முதல்கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் சிறப்பம்சமாக பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்த 9 மாணவர்களுக்கு வைர மோதிரம் மற்றும் வைர கம்மலை விஜய் பரிசாக அளித்தார்.

இவ்விழாவில் பேசிய விஜய், “நமது தமிழகத்தில் உலகத் தரத்திலான மருத்துவர்கள், பொறியியலாளர்கள் அதிகமாகவே உள்ளனர். நமக்கு எது அதிகமாக தேவைப்படுகிறது என்றால், அது நல்ல தலைவர்கள். அரசியல் ரீதியாக மட்டும் இதை சொல்லவில்லை. ஒரு துறையில் சிறந்து விளங்கினால், அதன் தலைமையிடத்துக்கு நீங்கள் செல்ல முடியும். அதனை தான் இன்னும் நல்ல தலைவர்கள் தேவை என்றேன். அதுமட்டுமில்லை, எதிர்காலத்தில் அரசியலும் ஒரு தொழில் விருப்பமாக வர வேண்டும் என்பது எனது எண்ணம். நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்” என்றார்.

மேலும், “தமிழகத்தில் போதைப்பொருட்களின் பயன்பாடு இளைஞர்கள் மத்தியில் மிக அதிகமாகிவிட்டது. ஒரு பெற்றோர் என்ற முறையிலும், அரசியல் இயக்கத்துக்கு தலைவர் என்ற முறையிலும் எனக்கே இது மிக அச்சமாக உள்ளது” என்று அவர் கூறினார்.

காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 8.30 மணி வரை இந்நிகழ்வு நடைபெற்றது. கிட்டதட்ட 10 மணி நேரத்துக்கும் மேலாக மாணவர்களுக்கு பரிசு, மற்றும் சான்றிதழ்களை விஜய் வழங்கிய நிலையில் இன்றைய நிகழ்வு நிறைவு பெற்றது. இன்று 21 மாவட்ட மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் அளிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான நிகழ்வு ஜூலை 3-ம் தேதி நடைபெற உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.