`தி லிவர் டாக்டர்’ என பிரபலமாக அறியப்படுபவர் கேரளாவைச் சேர்ந்த சைரியாக் அப்பி பிலிப்ஸ். கடந்தாண்டு ஆகாசா ஏர் விமானத்தில் கொச்சியில் இருந்து மும்பை சென்றபோது, பயணி ஒருவர் மூச்சுத்திணறலால் சிரமப்பட, அவரை காப்பாற்றி கவனம் பெற்றார்.
அன்றிலிருந்து தொடர்ச்சியாக சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருப்பவர், தனக்கு நடந்த சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், அவரது வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு சளி, சோர்வு, மூட்டுவலி போன்ற பிரச்னைகளும், கூடவே உடலில் விநோதமான சருமப் பிரச்னையும் இருந்துள்ளது. விட்டு விட்டு காய்ச்சலும் வந்திருக்கிறது.
என்ன பாதிப்பு என்பதைக் கண்டறிய ஹெபடைடிஸ், கோவிட், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் டெங்கு போன்ற பல நோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொண்டிருக்கிறார். ஆனால், பிரச்னை என்ன என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால் விரக்தியில் இருந்தவரிடம் அவரது வீட்டில் பணிபுரியும் வயதான பணிப்பெண், “இது போன்ற சருமப் பிரச்னை என் பேரக்குழந்தைகளுக்கு இருந்தது. இதை உள்ளூர் மொழியில் `அஞ்சாம்பாணி’ (5th Disease) என்று சொல்வோம்’’ என்றிருக்கிறார்.
அதன்பின் ‘பார்வோ வைரஸ்’ தொற்றுக்கான பரிசோதனைகளை மேற்கொண்ட போது, அந்தப் பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
`அஞ்சாம்பாணி’ என்ற நோய் எரைத்திமா இன்ஃபெக்ஷியோசம் (erythema infectiosum) என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் தொற்று மனித பார்வோவைரஸ் பி 19-ஆல் உண்டாகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கன்னங்களில் சிவப்பு நிறத்தில் சொறி போன்று இருக்கும். இது உடலின் பிற பாகங்களுக்கும் பரவும்.
பெரும்பாலும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் இந்நோய், பாதிக்கட்ட நபர் இருமும் போதும், தும்மும்போதும் பிறருக்குப் பரவுகிறது.
இதுகுறித்து பதிவிட்டுள்ள மருத்துவர், `எனது 17 வருட மருத்துவக் கல்வியில் அறிய முடியாததை வயதான பணிப்பெண் 10 விநாடிகளில் கண்டுபிடித்துவிட்டார். ஒவ்வொருவருக்கும் கற்பிக்க ஏதாவது ஒன்று இருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.