INDvENG: `நாங்க வேற மாதிரி!'- இறுதிப்போட்டியில் இந்தியா! – இங்கிலாந்தை எப்படி வீழ்த்தியது?

டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி இங்கிலாந்தை மிகச்சிறப்பாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இந்திய அணிக்கு சவாலளிக்கும் வகையில் போட்டி இருக்கும் என எதிர்பார்க்க அப்படி ஒன்றுமே இல்லை. இந்திய அணி ரொம்பவே சௌகரியமாக போட்டியை வென்றிருக்கிறது.

Rohit

மழை காரணமாக டாஸே 50 நிமிடங்கள் தாமதமாமத்தான் போடப்பட்டிருந்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர்தான் டாஸை வென்றிருந்தார். முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். நான் டாஸை வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங்தான் எடுத்திருப்பேன். அதனால் பிரச்னை ஒன்றுமில்லை என பாசிட்டிவ்வாகத்தான் பேசி ஆரம்பித்திருந்தார் ரோஹித் சர்மா. இந்திய அணியின் பேட்டிங் தொடங்கியது. ரீஸ் டாப்ளே முதல் ஓவரை வீசினர். இந்திய பேட்டர்கள் கொஞ்சம் மெதுவாகவே தொடங்கியிருந்தனர். விராட் கோலி இந்த உலகக்கோப்பையில் 6 போட்டிகளை 66 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இது பெரிய போட்டி என்பதால் இங்கே கட்டாயம் சோபிப்பார் என்கிற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்தனர். ஆனால், இம்முறையும் ஏமாற்றமே மிஞ்சியது. கோலி தொடக்கத்தில் சில பந்துகளை பார்த்து ஆடி செட்டில் ஆகிவிட்டு அதன்பிறகே அட்டாக் செய்வார். ஆனால், இந்தத் தொடரில் அணியின் திட்டப்படி முதல் பந்திலிருந்தே அட்டாக் செய்ய வேண்டும் என்றே அவர் நினைக்கிறார். அதுதான் பிரச்னை.

டாப்ளே பந்தில் மிட் விக்கெட்டை க்ளியர் செய்து ஒரு சிக்சரை அடித்தவர், அதே ஓவரில் இன்னொரு பந்தையும் அட்டாக் செய்யும் முனைப்போடு இறங்கி வந்து போல்டாகி 9 ரன்களில் வெளியேறினார். பவர்ப்ளேக்குள்ளாகவே சாம் கரனும் வந்தார். பண்ட் பெரிய ஷாட்டுக்கு முயன்று மிட் விக்கெட்டை க்ளியர் செய்ய முடியாமல் 4 ரன்களில் கேட்ச் ஆனார். இரண்டு முக்கியமான பேட்டர்கள் சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆனதால் இந்திய அணி கொஞ்சம் தடுமாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அட்டாக் செய்து ஆட வேண்டும் என்கிற விஷயத்தை இந்திய அணி கைவிடவே இல்லை. ரோஹித் சர்மாவும் சூர்யகுமார் யாதவ்வும் கூட்டணியாக இணைந்து மிரட்டினர். ரோஹித் சர்மா கடந்த போட்டியில் எங்கே விட்டாரோ அங்கிருந்தே தொடங்கியதைப் போல இருந்தது

SKY

இங்கேயும் க்ரீஸை நன்றாக பயன்படுத்தி இரண்டு பக்கமும் நகர்ந்து நகர்ந்து பெரிய ஷாட்களை ஆடி அசத்தினார். சூர்யகுமாரும் வழக்கம்போல 360 டிகிரியில் ஷாட்களை ஆடி மிரட்டினார். 8 ஓவர்களில் இந்திய அணி 65 ரன்களை எடுத்திருந்தது. இந்த சமயத்தில் மழை குறுக்கிட்டது. கொஞ்ச நேரம் கழித்துதான் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. மழைக்குப் பிறகு பேட்டிங் இன்னும் கொஞ்சம் சிரமமானது. ஆனாலும் ரோஹித், சூர்யா இருவருமே ரிஸ்க் எடுத்து வேகவேகமாக ரன்களை சேர்த்தனர். அரைசதத்தைக் கடந்திருந்த ரோஹித் சர்மா அடில் ரஷீத்தின் பந்தில் போல்டாகி வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 48 ரன்களில் ஆர்ச்சர் வீசிய ஒரு ஸ்லோயர் ஒன்னில் பெரிய ஷாட் ஆட முயன்று பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். இதன்பிறகு ஹர்திக் பாண்ட்யா மற்றும் ஜடேஜா ஆகியோரிடம் இருந்து கணிசமான பங்களிப்பு கிடைக்கப் பெற இந்திய அணி 171 ரன்களை எடுத்திருந்தது.

போட்டி நடைபெற்ற மைதானத்தில் 167 தான் சராசரி ஸ்கோர். இந்திய அணி இந்த ஸ்கோரை தாண்டியே ரன் எடுத்திருந்தது. ஆனாலும் இங்கிலாந்தின் பேட்டிங் லைன் அப் அபாயகரமானதாகவும் நீண்டதாகவும் இருந்ததால் இந்தியாவுக்கு சவால் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணி ரொம்பவே எளிதாக இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கியது. இந்திய அணியின் ஸ்பின்னர்கள் அக்சரும் குல்தீபும் திருப்புமுனையை ஏற்படுத்தினர். அக்சர் படேல் பவர்ப்ளேக்குள்ளாகவே வந்தார். பட்லர் இவரின் பந்தில் ரிவர்ஸ் அடிக்க முற்பட்டு கேட்ச் ஆகி வெளியேறினார். சால்ட்டை பும்ரா போல்டாக்க, பேர்ஸ்ட்டோவை ரன் கணக்கை தொடங்கவிடாமலேயே அக்சர் போல்டாக்கினார்

பவர்ப்ளேயில் 39 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இங்கிலாந்து இழந்திருந்தது. இங்கேயே போட்டி இந்தியா பக்கமாக வந்துவிட்டது. பவர்ப்ளேக்கு பிறகு குல்தீப் யாதவ் பொறுப்பை எடுத்துக் கொண்டார் ஹாரி ப்ரூக், சாம் கரண், ஜோர்டன் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து குல்தீப் வீழ்த்தி அசத்தினார். முக்கியமான பேட்டராக லிவிங்ஸ்டன் மட்டும் களத்தில் இருந்தார். அவர் எதாவது செய்வார் என எதிர்பார்க்க பௌலர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதன்பிறகு இங்கிலாந்திடம் நம்பிக்கை கொள்ள எதுவுமே இல்லை. 103 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகினர். முக்கியமான போட்டியில் முக்கியமான சேஸிங்கில் இங்கிலாந்து வீரர்கள் ஒரு அரைசத பார்ட்னர்ஷிப்பை கூட எடுக்கவில்லை. எனில், போட்டியை தோற்க வேண்டியதுதான்.

Kuldeep

2022 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியிருந்தது. இப்போது இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கி 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றிருக்கிறது. இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. இந்திய அணி இன்னொரு உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியை எட்டியிருக்கிறது. இந்த முறை ஏமாற்றங்களை தவிர்த்து வெற்றி வாகை சூட வேண்டிய பொறுப்பு இந்திய அணிக்கு இருக்கிறது.

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமென நீங்கள் நினைப்பதை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.