ஆஸ்திரியாவை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத 52 வயதான நபர் நாளொன்றுக்கு ஒரு பாக்கெட் சிகரெட்டை புகைத்து வந்திருக்கிறார். புகைபிடிக்கத் தொடங்கிய 17 வருடங்கள் கழித்து அவருக்குத் தொடர்ச்சியான இருமல், குரலில் மாற்றம், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்காக 2007-ல் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.
`பிராங்கோஸ்கோபி’ (Bronchoscopy) மூலம் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அந்த நபரின் தொண்டை வீக்கமடைந்திருப்பதையும் அதில் சில முடிகள் வளர்ந்திருப்பதையும் கண்டறிந்தனர். அவர் தொண்டையில் முடி வளரும் (Endotracheal Hair Growth) என்ற மிக அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிப்பதைக் கூறியுள்ளனர்.
*காரணம் என்ன?!
இவருக்கு 10 வயது இருந்தபோது, நீரில் மூழ்கியிருக்கிறார். அந்தச் சமயத்தில் இவரின் சுவாசத்தை சீராக்க தொண்டைக்குக் கீழ்புறக் கழுத்துப் பகுதியில் துளையிட்டு, ஆக்ஸிஜன் செலுத்தப்படும் ‘ட்ரக்கியோஸ்டோமி ‘ (Tracheostomy) சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தக் காயத்தை மூட அவரது காதிலுள்ள தோல் மற்றும் குருத்தெலும்பை பயன்படுத்தி இருக்கின்றனர். தற்போது அந்த இடத்திலேயே இவருக்கு முடி வளர்ந்திருக்கிறது. முதல்முறை மருத்துவர்கள் அந்த முடிகளைப் பிடுங்கி அகற்றியுள்ளனர்.
ஆனால், இது நிரந்தர நிவாரணம் தரவில்லை. அதே இடத்தில் மீண்டும் முடிகள் வளர்த் தொடங்கியுள்ளன. 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதே பிரச்னையோடு அவர் மருத்துவமனையை அணுகி இருக்கிறார்.
அவரது தொண்டையில் 2 இன்ச் நீளமுள்ள முடிகள் இருந்துள்ளன. அது குரல் வளையைத் தாண்டி வாய் வரை வளர்ந்திருந்தது. இந்த முடிகள் பாக்டீரியாவால் மூடப்பட்டிருந்த நிலையில் இவருக்கு முதலில் ஆன்டிபயாடிக்ஸ் கொடுக்கப்பட்டன. அதன்பின்னர் தொண்டையில் முடி வளரும் வேரை எரிக்கும் சிகிச்சை (Argon plasma coagulation) அளிக்கப்பட்டுள்ளது.
அதோடு இவர் 2022-ல் புகைபிடிப்பதை நிறுத்தியதில் இருந்து முடி வளர்வது நின்றுள்ளது.
28.3 மில்லியன் மக்களில் அல்லது ஒன்பது அமெரிக்கர்களில் ஒருவர் இந்த அரிய பிரச்னையால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
`இது அரிய பிரச்னையாக இருந்தாலும், புகைப்பழக்கத்தால் இந்தப் பிரச்னை தூண்டப்பட்டிருக்கிறது. புகைபிடித்தல் தொண்டை திசுக்களின் வீக்கத்தைத் தூண்டி, ஸ்டெம் செல்களை முடியாக (hair follicles) மாற்றுகிறது’ என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த செய்திகள் அமெரிக்கன் ஜர்னலில் வெளிவந்துள்ளன.