ஆர்டிஐ சட்டத்தின் கீழ் ஆவணங்கள் கோரியவர் 3 ஆண்டாக இழுத்தடிப்பு: சென்னை ஐகோர்ட் அதிருப்தி

சென்னை: தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் ஆவணங்கள் கோரி விண்ணப்பித்தவரை 3 ஆண்டுகளாக அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் இழுத்தடித்து வருவது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்ட செஞ்சி தாலுகா பெரியாமூரில் பச்சையப்பன் என்பவரின் தாயாருக்குச் சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு கூட்டுப்பட்டா உள்ள நிலையில் திடீரென அதில் 96 சென்ட் நிலம் புகழேந்தி என்பவரது பெயருக்கு மாறியிருப்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் எழுப்பி பச்சையப்பன் செஞ்சி துணை வட்டாட்சியருக்கு கடந்த 2021 நவ.7 அன்று விண்ணப்பித்துள்ளார். ஆனால் அதற்கு எந்த பதிலும் இல்லை என்பதால் செஞ்சி வட்டாட்சியிரிடம் முறையீடு செய்துள்ளார்.

அதன்பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதை விசாரித்த மாநில தகவல் ஆணையம் அவர் கோரும் ஆவணங்களை வழங்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் செஞ்சி துணை வட்டாட்சியருக்கு கடந்த 2022 டிச.8 அன்று உத்தரவிட்டது.



ஆனால், அதன்பிறகும் செஞ்சி துணை வட்டாட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் பச்சையப்பன் மீண்டும் மாநில தகவல் ஆணையத்தில் முறையிட்டுள்ளார். அந்த மனுவை விசாரித்த தகவல் ஆணையம், கடந்த 2023 மே 30 அன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், துணை வட்டாட்சியர் ரூ. 20 ஆயிரத்தை நஷ்டஈடாக பச்சையப்பனுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

ஆனால், அந்த உத்தரவையும் விழுப்புரம் மாவட்ட வருவாய் அதிகாரி, செஞ்சி வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிறைவேற்றவில்லை. இதையடுத்து பச்சையப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான பி. அமலா, வருவாய்துறை அதிகாரிகள் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஷாஜகான், மாநில தகவல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் சி. விக்னேஷ்வரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனுதாரர் கோரிய ஆவணங்களை செஞ்சி துணை வட்டாட்சியர் வழங்க மறுத்து இருப்பது, சட்ட ரீதியிலான உத்தரவுகளை அவர் மதிப்பது கிடையாது என்ற மெத்தனப்போக்கையே காட்டுகிறது. இது ஏற்புடையது அல்ல. அத்துடன் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே, மனுதாரர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தி்ன் கீழ் கோரிய ஆவணங்களை செஞ்சி வட்டாட்சியர் அலுவலகம் வழங்க மறுப்பது குறித்தும், அந்த ஆவணங்கள் மாயமானது குறித்தும் மாவட்ட வருவாய் அதிகாரி தனியாக சிறப்பு விசாரணை நடத்த வேண்டும். அத்துடன் மாநில தகவல் ஆணையம் கடந்த 2023-ம் ஆண்டு பிறப்பி்த்துள்ள உத்தரவை உடனடியாக மாவட்ட வருவாய் அதிகாரி அமல்படுத்த வேண்டும். இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் ஜூலை 10 அன்று அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.