இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது போயிருந்தால் இலங்கை மற்றுமொரு கென்யாவாக மாறியிருக்கும்

  • காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்கும் பொருளாதார வலுவற்ற ஆப்பிரிக்க பிராந்திய நாடுகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
  • இவ்வாறான நிவாரணங்களை எதிர்பார்க்காமல் உள்நாட்டுக் கடனை முகாமைத்துவம் செய்துக்கொண்டு முன்னோக்கி பயணிப்பதற்கான இயலுமையும் திறனும் இலங்கைக்கு உள்ளது.
  • காலநிலை மாற்றத்தை கையாள்வதற்கான பிராந்திய தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள இலங்கை தயாராக உள்ளது – ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் விழா – 2024 இல் ஜனாதிபதி தெரிவிப்பு.

பொருளாதாரப் பிரச்சினை காரணமாக கென்யா பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அதனால் கொலைகளும் இடம்பெற்று வருகின்றன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி நாடொன்றின் பொருளாதாரத்தைத் தயார்படுத்துவது மிகவும் அவசியமானது என்றும், நாட்டுக்குள் பொருளாதார நிலைமை ஏற்படுத்த தவறியிருந்தால், இலங்கையின் நிலைமையும் அவ்வாறுதான் இருந்திருக்கும் என்றும் ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (28) நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

 

“காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் பொருளாதார வலுவற்ற ஆபிரிக்க பிராந்திய நாடுகளின் கடன் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்பதை இலங்கையின் வௌியுறவுக் கொள்கையில் உள்வாங்கியிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

அத்துடன், காலநிலை மாற்றத்தை கையாள்வது தொடர்பிலான பிராந்திய தலைமைத்துவத்தை ஏற்க இலங்கை தயாராக இருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை தற்போது சர்வதேச சமூகத்திற்குள் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

 

சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக சிறப்பான பணியை அற்றியுள்ள தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை கௌரவிக்கும் வகையில், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையினால் வருடம்தோறும் ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் விழா ஏற்பாடு செய்யப்பட்டு, ஊடக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திட்டமிடல் நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சேர்ந்த 124 பேருக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களும் வழங்கப்பட்டன.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்க விருதுகளை வழங்கிவைத்ததோடு, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் வெணுர பெர்னாண்டோ மற்றும் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க ஆகியோரால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.

 

விருது வழங்கும் நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விருது பெற்றவர்களுடன் குழு புகைப்படத்திலும் இணைந்துகொண்டார்.

 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

 

“இந்த வருடமும் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ‘ஜனாதிபதி சுற்றாடல் விருது’ வழங்கும் விழா பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டமைக்காக பாராட்டுகின்றேன். கடந்த வருடம் சுற்றுச் சூழலுக்காக சிறந்த சேவை செய்தவர்களுக்கு இன்று விருது வழங்கப்பட்டது.

 

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையானது 1981 இல் ஸ்தாபிக்கப்பட்டது. இது பிரதமர் ரணசிங்க பிரேமதாசவின் செயலாளராக இருந்த விஜேதாசவினால் ஸ்தாபிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சுற்றுச்சூழல் குறித்து மாத்திரதே கவனம் செலுத்தப்பட்டது. அதற்கு முற்பட்ட தசாப்தத்தில் சுற்றுச்சூழல் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.

 

ஆனால் ரணசிங்க பிரேமதாச இந்தக் கருத்தை முன்வைத்தபோது, ​​இந்த அதிகார சபையை உருவாக்க அமைச்சரவை இணக்கம் தெரிவித்தது. அப்போது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் விடயங்களில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. அதன்படி இதன் பணிகளும் அந்த நோக்கத்திற்கானதாக மட்டுப்படுத்தப்பட்டது.

 

இன்று சுற்றுச்சூழல் என்ற விடயம் அதைவிடவும் விரிவடைந்துள்ளது. சுற்றுச்சூழலில் இருந்து காலநிலை மாற்றம் வரை விரிவடைந்துள்ளது. காலநிலை மாற்றம் இன்று உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது. மேலும் இது ஒரு பொருளாதார பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது. எனவே, சுற்றுச்சூழலும், காலநிலை மாற்றமும் சகல துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

 

1981 ஆம் ஆண்டு சட்டம் பற்றி புதிதாக சிந்திக்க வேண்டும். அதற்கான திருத்தங்களை சமர்ப்பிக்குமாறு செயலாளருக்கு அறிவித்துள்ளேன். உலகின் அனைத்து சுற்றுச்சூழல் அதிகார சபைகளும் தங்கள் சட்டங்களில் திருத்தம் செய்துள்ளன. இலங்கையும் அவற்றை செய்ய வேண்டும். அதற்கு அடுத்த படியாக காலநிலை மாற்ற சட்டத்தை உருவாக்கவும் தீர்மானித்துள்ளோம். அதற்காக காலநிலை மாற்ற மையத்தையும் அமைத்து அதற்கு ஆலோசகர்களையும் நியமித்துள்ளோம்.

 

மேலும், காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் செயற்பாடுகளுக்காக, சர்வதேச அளவிலான பணிகளையும் ஏற்றுக்கொண்டுள்ளோம். அதன்படியே காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதற்கான சட்டங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளோடு நின்றுவிடவில்லை. இன்னும் முன் நோக்கி நகர்திருக்கிறோம். நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைந்து கொள்ள வேண்டும் என்ற இலக்கை நாட்டின் தேசிய பொருளாதாரக் கொள்கையில் உள்வாங்கியுள்ளோம்.

 

டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை கட்டமைக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். அதனுடன் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளோம். இத்திட்டத்தை இப்போதிருந்தே ஆரம்பித்து 2048 க்குள் அதற்குரிய இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டும். பொதுவாக உலகில் இந்த இலக்குகள் 2050 க்குள் எட்டப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் 2050 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே நாம் குறித்த இலக்கை நோக்கி நகர முடியும்.

 

அதேபோன்று, இந்தத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பசுமை நிதியியல் மற்றும் பசுமைப் பிணைமுறிகள் தேவை. அப்போது இது பொருளாதார திட்டத்தில் இணைக்கப்படும். இந்த இலக்குகளை நாம் அடைய வேண்டும். இன்று உலகம் முழுவதையும் அவதானித்து இந்தப் பணிகளைச் செய்து வருகிறோம்.

 

காலநிலை மாற்றத்தை எந்தவொரு நாடும் தனியே எதிர்கொள்ள முடியாது. அதற்காக அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால் இந்த திட்டத்தை நாம் ஆரம்பித்தாலும், சில மேற்கு நாடுகள் அதிலிருந்து விலகி இருக்கின்றன. அன்று இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜொன்சன் கிளாஸ்கோ பிரகடனத்தை வெளியிட்டார்.

 

ஆனால் இன்று பிரித்தானிய அரசாங்கம் அதனை விட்டு வெளியேற முயல்வதை ஒரு சிறந்த உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம். எனினும், இந்த விடயத்தில் அமெரிக்காவின் முடிவை நவம்பரில் நடைபெறும் தேர்தலுக்குப் பிறகுதான் தெரிந்துகொள்ள முடியும்.

 

ஆனால் இந்த இலக்கை நோக்கி எப்படி பயணிப்பது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும். இதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது. ஆபிரிக்கா மற்றும் ஆசியாவின் பல நாடுகள் கடனில் உள்ளன. அந்த நாடுகள் கடன் நிவாரணம் கேட்டுள்ளனர். ஆசியாவின் கடன் நிவாரண கோரிக்கையை நான் ஆதரிக்கவில்லை.

 

இலங்கையின் கடன் பிரச்சினையை எம்மால் தீர்க்க முடியும் என நான் சுட்டிக்காட்டினேன். ஆனால், ஆபிரிக்காவில் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கை தற்போது முதல் படியை எடுத்துள்ளது. அதன்படி, நாம் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளோம். இப்போது பொருளாதார மாற்றச் சட்டத்தை நிறைவேற்றி அந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். ஆனால் ஆபிரிக்கா போன்ற நாடுகள் அந்த செயன்முறையைச் செய்வது கடினம்.

 

எனவே, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். குறிப்பாக ஆபிரிக்க நாடுகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய இலங்கை காலநிலை மாற்ற மாநாட்டில் முன்மொழிந்தது.

 

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நிதி ஒதுக்கீடுகள் அவசியம். இதற்குத் தேவையான பணம் இது வரை கிடைக்கவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகள் சுமார் 100 பில்லியன் டொலர்களை உக்ரைன் போரிலும் காஸா போரிலும் செலவு செய்துள்ளன. ரஷ்யா எவ்வளவு செலவழித்தது என்பது எங்களுக்குத் தெரியாது. இந்தப் பணத்தை ஆபிரிக்க நாடுகளுக்கும், ஏனைய நாடுகளுக்கும் வழங்கினால், சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

 

யுத்தம் செய்து பயனில்லை. உக்ரைனில் போரை நிறுத்துமாறு நாங்கள் கோருகிறோம். காஸாவில் போரை நிறுத்துங்கள். அந்தப் போரை நிறுத்தி 05 வருடங்களில் பலஸ்தீன அரசை உருவாக்குங்கள். அதேபோன்று, இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்தும் நடவடிக்கை எடுங்கள்.

 

ஆனால் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையானது அது பற்றிய உலகின் தெற்கில் குரல் எழுப்புவதாகும். இந்தப் போரை நிறுத்தி ஆபிரிக்க நாடுகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த நாட்களில் கென்யாவில் நடந்த கலவரங்களைப் பார்த்தோம். தற்போது சுமார் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சீர்செய்யவில்லை என்றால் ஏற்படும் நிலைதான் இது. இலங்கையில் இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்காவிடின் நாமும் இதே நிலையை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டிருக்கும்.

 

எனவே, இந்தப் பணத்தை அந்த நாடுகளுக்கு வழங்க வேண்டும். அதற்கு இலங்கை முழுமையாக ஆதரவளிக்கிறது. அத்தகைய உதவியை இலங்கை எதிர்பார்க்கவில்லை. இலங்கை தனது கடனை மறுசீரமைத்து முன்னோக்கிச் செல்கிறது. அதற்குத் தேவையான ஆற்றலும் அறிவும் நம்மிடம் உள்ளது. அந்தப் பாதையில் நாம் தொடர வேண்டும். அதன்போது, நாம் போட்டிமிக்க, டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்திற்கு மாற வேண்டும். நமது சக்தியுடன் அந்தப் பயணத்தை நாம் மேற்கொள்வோம்.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர,

 

”இந்நாட்டின் சுற்றாடலைப் பாதுகாப்பற்கு அரச நிறுவனங்கள் மற்றும் பிரஜைகள் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டுவதற்காக வருடாந்தம் இந்த விருது விழா ஏற்பாடு செய்யப்படுகின்றது. தொழிற்துறைகள் மூலம் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கு உங்களின் ஆர்வம் மற்றும் முயற்சி மேலும் பலருக்கு ஊக்கமூட்டுவதற்காவே இவ்வாறு பாராட்டப்படுகின்றது என்பதைக் குறிப்பிட வேண்டும்.

 

நாளை பிறக்கும் பிள்ளைக்காக சிறந்த சுற்றாடல் கட்டமைப்பை உருவாக்குவதற்கு சுற்றாடல் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார். 2032 ஆம் ஆண்டாகும்போது வனப்பரப்பை அதிகரித்துக்கொள்வதை இலக்காகக் கொண்டு கடந்த சுற்றாடல் தினத்திற்கு இணைந்த வகையில் பத்து இலட்சம் செடிகளை நடும் வேலைத்திட்டத்தை நாம் செயற்படுத்தினோம்.

 

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வீழ்ச்சியடைந்த தொழிற்துறையை மீண்டும் மீட்டெடுக்க பாரிய முயற்சிகளை மேற்கொண்டார் என்பதை நான் புதிதாகக் கூறவேண்டிய அவசியமில்லை. எமது நாடு மீண்டும் உலகில் ஏற்றுக்கொண்ட நாடாக மாறியது அதனாலாகும். தொழிற்துறையைில் ஏற்படும் இந்த முன்னேற்றத்துடன் சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பது எமது பொறுப்பாகும்.

 

அதனால், 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி சுற்றாடல் விருதுக்கு இம்முறையை விட அதிக விண்ணப்பங்கள் கிடைக்கும் என நாம் நம்புகின்றோம். அப்போது, இந்நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்காக தொழிற்துறையை மேம்படுத்தி நீங்கள் வழங்கும் பங்களிப்பையும் சுற்றாடலைப் பாதுகாப்பதற்காக நீங்கள் வழங்கும் ஆதரவையும் எம்மால் பாராட்ட முடியும்.” என்று தெரிவித்தார்.

 

சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பீ.கே. பிரபாத் சந்திரகீர்த்தி, தூதுவர்கள், சுற்றாடல் துறை நிபுணர்கள், அரச அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.