ஓடும் ரெயிலில் இருந்து திடீரென கழன்ற பெட்டிகள்: வேகம் குறைவால் பெரும் விபத்து தவிர்ப்பு

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் எர்ணாகுளம்-ஜார்கண்ட் மாநிலம் டாடா நகர் இடையே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்டு திருச்சூர் மாவட்டம் சாலக்குடியை கடந்து வந்து கொண்டிருந்தது. ரெயிலில் 20 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன. அதில் 1500-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். காலை 10 மணியளவில் வள்ளத்தோடு ரெயில் நிலையம் அருகே வந்த போது, அங்குள்ள பாலத்தை ரெயில் கடந்து செல்ல வேண்டி இருந்தது.

இதனால் ரெயிலின் வேகம் குறைக்கப்பட்டு மிதமான வேகத்தில் இயக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக ரெயில் என்ஜினில் இருந்து பெட்டிகள் திடீரென கழன்று தனியாக சென்றது. உடனே நிலைமையை உணர்ந்த என்ஜின் டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு என்ஜினை ரெயில் நிலையத்தில் நிறுத்தினார். பெட்டிகள் சிறிது தூரம் சென்று தானாகவே நின்றது. ரெயிலின் வேகம் குறைவாக இருந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருச்சூர், பாலக்காட்டில் இருந்து அதிகாரிகள், பொறியாளர்கள் விரைந்து சென்றனர். பின்னர் கழன்ற ரெயில் பெட்டிகள் மற்றொரு ரெயில் என்ஜின் உதவியோடு இழுத்து வரப்பட்டன. அந்த என்ஜினோடு உரிய முறையில் பெட்டிகள் இணைக்கப்பட்டு, அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது.

இந்த சம்பவத்தால் ரெயில் 4 மணி நேரம் தாமதம் ஆனது. என்ஜினில் இருந்து பெட்டிகள் கழன்ற சம்பவம் எப்படி நடந்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்று ரெயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.