தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்தாண்டுக்கான மானிய கோரிக்கைமீதான விவாதம் இன்று தொடர்ந்தது. இதில், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அ.தி.மு.க சிபிஐ விசாரணை கோருவதை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின், சாத்தான்குளம் சம்பவத்தில் அப்போதைய அ.தி.மு.க அரசு உண்மைகளை மறைக்க முயன்றதால் தாங்கள் அன்று சிபிஐ விசாரணை கோரியதாகவும், இன்று கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தாங்கள் எதையும் மறைக்கவில்லையென்றும் தெரிவித்திருக்கிறார்.
தனது உரையின்போது அ.தி.மு.க-வை விமர்சித்து பேசிய ஸ்டாலின், “தங்களின் தேர்தல் தோல்வியை மறைக்க அவர்கள் போட்ட சதித்திட்டம்தான், நடவடிக்கையை எடுக்கப்பட்ட கள்ளக்குறிச்சி விவகாரத்தை தெடர்ந்து கிளப்பியது. 19-ம் தேதி சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க உத்தரவிட்டேன். அடுத்தநாள், அவையில் முழுமையான அறிக்கையைத் தாக்கல்செய்தேன். இந்த சம்பவத்தின் உண்மை காரணம் அறிய ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஆணையம் அமைத்தேன். சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டேன். குற்றவாளிகள் 20-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.
இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்க்கை பொறுப்பை அரசு ஏற்றிருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான நடவடிக்கைகளை 24 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட பிறகும் நடவடிக்கைகள் சரியில்லை என்று சொல்வது அவர்கள் நடத்தும் திசைதிருப்பல் நாடகம். சாத்தான்குளம் சம்பவத்தில் இரண்டுபேர் கொல்லப்பட்டதற்கே சிபிஐ விசாரணை கேட்டீர்களே என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருக்கிறார்.
மனித உயிர்கள் இறந்துபோனால் இரண்டா, இருபதா என்று பார்ப்பதில்லை… ஒருவர் இறந்தாலும் மாபெரும் இழப்புதான். அந்த சம்பவத்தை அன்றயை அ.தி.மு.க அரசு முழுமையாக மறைக்க நினைத்தது. அதனால் சிபிஐ விசாரணை கேட்டோம். ஆனால், இந்த அரசு இன்று எதையும் மறைக்கவில்லை. குறுகிய காலத்தில் குற்றவாளிகளைக் கைதுசெய்து, ஒருவர்கூட தப்பமுடியாது என்ற நிலைமையை உருவாக்கியிருக்கிறோம்.
இனிமேல், கள்ளச்சாராய உயிர்பலி எங்காவது நடைபெற்றால் அதற்கு அந்த மாவட்ட காவல்துறை அதிகாரி, அந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலைய அதிகாரியும்தான் பொறுப்பேற்க வேண்டுமென்று மிகவும் கண்டிப்புடன் கூறியிருக்கிறேன். வெளிமாநிலங்களிலிருந்து கடத்திவரப்படும் கஞ்சாவைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதில், கடந்த இரண்டு ஆண்டுகளில் குற்றவாளிகளின் ரூ.18 கோடி மதிப்பிலான 46 சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
கொடநாடு வழக்கில் இதுவரை 268 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, எட்டாயிரம் பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை பெறப்பட்டிருக்கிறது. சம்பவம் நடந்தபோது எதிரிகள் சிலருக்கு வெளிநாட்டிலிருந்து செல்போன் அழைப்புகள் வந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கை காப்பதில் இந்த அரசு சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.
முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்தக் கூட்டத்தொடரில் எடுத்த தவறான நிலைப்பாடு எனக்கு வருத்தமளிக்கிறது. ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்குப் பதில்சொல்வதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அதைக் கேட்பதற்குதான் அ.தி.மு.க தயாராக இல்லை. ஒருபுறம் தேர்தல் தோல்வி, மறுபுறம் சொந்தக் கட்சி நெருக்கடி என சிக்கிக்கொண்டு அதிலிருந்து தப்பிப்பதற்காக அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியது அ.தி.மு.க.
நாங்கள் ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து எதிர்க்கட்சியினர் இந்த அவையில் எவ்வளவு நேரம் பேசியுள்ளனர் என்பதையும், அ.தி.மு.க ஆட்சியில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எங்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதை ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டு ஆட்சிகளின் ஜனநாயக பண்பு தெரியும்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88