Gold Rate: தங்கம் விலை ஏற்ற இறக்கமாகவே காணப்படும் நிலையில், திடீரென இரண்டு நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. உலக சந்தையில் ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் தங்கம் விலை கிட்டத்தட்ட 2 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்திய சந்தையில் தங்கம் விலை 1 சதவிகிதம் மேல் உயர்ந்து உள்ளது.
தங்கம் விலை திடீர் உயர்வுக்கு காரணம் என்ன?
அமெரிக்காவில் மே மாதத்துக்கான பணவீக்க விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, பணவீக்கம் எதிர்பார்ப்புக்கு ஏற்பவே இருக்கிறது. மேலும், ஏப்ரல் – மே மாதங்களில் பணவீக்கம் உயரவே இல்லை என தெரியவந்துள்ளது. இது தங்கம் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், பணவீக்கம் உயரவில்லை என்பதால் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி விரைவில் வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பின்படி, செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் என கூறப்படுகிறது.
அப்படி அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும். அதேபோல, தங்கத்தின் விலை ஏறத் தொடங்கிவிடும். எனவே, முதலீட்டாளர்கள் இப்போதே தங்கத்தை வாங்கத் தொடங்கிவிட்டனர். இதனால்தான் தங்கம் விலை உயர்ந்து வருகிறது.
ஜூன் 29-ம் தேதி சென்னையில் 22 கேரட் தங்கம் விலை சவரனுக்கு 53,480 ரூபாயாக உள்ளது. 24 கேரட் தங்கம் விலை சவரனுக்கு 57,240 ரூபாயாக உள்ளது.