புதுடெல்லி: பிஹாரில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஒப்பந்த முறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு ஊழியர்களின் அந்தஸ்து வழங்க கடந்த 2023-ல் மாநில அரசு முடிவெடுத்தது.
அதன்படி அரசாங்க வேலை தேடும் ஒப்பந்த ஆசிரியர்கள் பிஹார் பள்ளி தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒருவேளை பிஹார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (பிபிஎஸ்சி) நடத்தும் ஆசிரியர் ஆட்சேர்ப்புத் தேர்வில் (டிஆர்இ) தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பின் இந்தத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை பாட்னா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ஒப்பந்த ஆசிரியர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா இந்த மனுவை நேற்று விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வேலை கிடைத்துவிட்ட ஒரு முதுநிலை பட்டதாரியால் சாதாரண விடுப்பு கடிதத்தைக் கூட எழுத முடியாதா? பிஹார் போன்றதொரு மாநிலம் இந்த அமைப்பை முன்னேற்றும் முயற்சியில் தகுதித் தேர்வு நடத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. நாட்டை கட்டமைக்க ஆசிரியர்கள் உதவி புரிகின்றனர். அப்படி இருக்கையில் உங்களால் இந்த திறன் தேர்வைகூட எதிர்கொள்ள முடியாது என்றால் நீங்கள் ராஜினாமா செய்துவிட்டு போகலாம். இவ்வாறு தெரிவித்த நீதிபதி மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தார்.