சென்னை: புளியந்தோப்பில் அடுக்குமாடி குடியிருப்பு லிப்டில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழந்தார்.
சென்னை புளியந்தோப்பு கே.பி பார்க் நகர்புற மேம்பாட்டு வாரியத்துக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு இ பிளாக்கில் 8 மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் கணேசன்(60). இவர் கே.பி.பார்க் அலுவலகம் அருகே டிபன் கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில், இன்று மாலை வழக்கம் போல, டிபன் கடை வியாபாரத்தை தொடங்க வீட்டில் இருந்து அவர் புறப்பட்டுள்ளார். 8 மாடியில் இருந்து லிப்டில் ஏறிய கணேசன், தரை தளத்துக்கு வந்துள்ளார். அப்போது லிப்ட் திடீரென பழுதாகி 7 மாடியில் பாதியில் நின்றது.
இதையடுத்து, கணேசன் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் லிப்ட் ஆப்பரேட்டர் சாமுவேலை வரவழைத்தனர். அவர் பாதியில் நின்று கொண்டிருந்த லிப்ட்டின் கதவை திறந்தார்.
பின்னர், லிப்டில் இருந்து கணேசனை கீழே இறங்குமாறு அங்கிருந்தவர்கள் அறிவுறுத்தனர். பயத்தில் லிப்டில் இருந்து முதலில் இறங்க மறுத்த கணேசன், பின்னர் தைரியத்தை வரவழைத்து கீழே இறங்க முயற்சித்தார். லிப்டை பிடித்துக் கொண்டு, காலை கீழே தொங்கவிட்டப்படி, கணேசன் கிழே இறங்கினார்.
அப்போது, கணேசன், அவரது காலை லிப்ட்டின் உள் பக்கம் விட்டபடி கீழே இறங்கி உள்ளார். இதனால், அவர் லிப்டின் உள்பக்கமாக 7 மாடியில் இருந்து தரை தளத்தில் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த புளியந்தோப்பு போலீஸார் அவரது உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.