நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வரும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் வெல்வோம் ஸ்ரீலங்கா வேலை திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (28) நடைபெற்றது.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புலம் பெயர் தொழிலாளர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களின் பிள்ளைகளுக்கு பெறுமதியான கற்றல் உபகரணங்கள் புத்தகப்பைகள், காசோலைகள் மற்றும் ஸ்மார்ட் பலகை என்பன வழங்கி வைக்கப்பட்டன.
புராதன காலத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டம் தனித்துவமான பெயர் கொண்ட ஒர் பிரதேசமாக உள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டியதுடன் இப் பிரதேச மக்களின் சுறுசுறுப்புத் தன்மையை எமது நாட்டின் அபிவிருத்தில் உள்ளீர்த்து சர்வதேச ரீதியிலான வணிகத்தினை நோக்கி முன்நகர்த்த வேண்டும் என்றார். மேலும் நாட்டை கட்டியெழுப்புவதற்கு கட்சி, இன பேதமின்றி அனைவரும் ஒன்றுபட வேண்டும். நாடு பொருளாதார வீழ்ச்சியடைந்த காலத்தில் வெளிநாட்டில் உள்ளவர்கள் அனுப்பும் பணம் அபிவிருத்தி செய்வதற்கு பாரிய உதவியாக உள்ளதை நினைவு கூர்ந்தார்.
மேலும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தில் அங்கீகரிக்கப்பட்ட 40 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களின் சேவைகள் இலவசமாக இதன் போது வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கள், கிழக்கு மாகாண ஆளுநர் செத்தில் தொண்டமான், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந், உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.