"மீனா தன் நடக்கமுடியாத மாமியாரை அம்மா மாதிரி பார்த்துக்கிறா! அதுக்குக் காரணம்…" – கலா மாஸ்டர்

நேற்று நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம். இரண்டு வருடங்களுக்கு முன்பு, உடல்நலக் குறைவால் மீனாவின் கணவர் உயிரிழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

கணவர் மறைந்தாலும் பெரும் நம்பிக்கையுடன் மகளுக்காக அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்து பழையபடி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் மீனாவுக்கு, இப்போதுவரை உறுதுணையாக உற்றத் தோழமையாக இருந்து தேற்றி வருபவர் கலா மாஸ்டர். மீனாவின் எல்லா நிகழ்விலும் கலா மாஸ்டரை பார்க்கமுடியும். அந்தளவிற்கு மீனாவின் தாயன்புக்குரிய தோழியாக இருந்துவரும் கலா மாஸ்டரிடம், மீனா குறித்துப் பேசினோம்.

“எனக்கும் மீனாவுக்கும் 20 வருட நட்பு. ஷூட்டிங் டைம்லதான் ஃப்ரண்ட்ஸ் ஆனோம். கொரியோகிராஃபி முடிச்சதும் நேரா மீனாக்கிட்டத்தான் போவேன். நான், மீனா, ஆன்ட்டி (மீனா அம்மா) எல்லோரும் ஜாலியா பேசிட்டிருப்போம். ஷூட்டிங் போனாலும் ஒண்ணாத்தான் ஷாப்பிங் போவோம். அந்த நட்பு இப்போவரை, அதே அன்போடு தொடர்வது சந்தோஷமா இருக்கு.

கலா மாஸ்டர்

மீனா எல்லோர் மேலயும் ரொம்ப அன்பா இருப்பா. கொஞ்சம் குழந்தைத்தனமான கேரக்டர். எப்பவுமே அவளை ‘என்ன தங்கம் பண்ற… டார்லிங்… ஸ்வீட் ஹார்ட்’னு கொஞ்சுவேன். அவ திடீர்னு கட்டிப்பிடிச்சு ‘சேச்சி ஐ லவ் யூ’ன்னு கொஞ்சுவா. நேரம் காலமெல்லாம் கிடையாது. தோணுச்சுன்னா, அன்பைப் பொழிஞ்சுக்குவோம். எங்களோட இத்தனை வருட நட்புல சின்ன மிஸ் அன்டர்ஸ்டாண்டிங் கூட வந்தது கிடையாது. ஈகோவும் இல்லை.

எங்களோடது எதிர்பார்ப்பில்லாத நிபந்தனையற்ற உண்மையான அன்பு. எல்லா நல்லது கெட்டதிலும் அன்பையும் ஆறுதலையும் பரிமாறிக்குவோம். ரெண்டு பேருக்குமே நிறைய ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. ஆனாலும் எங்களோடது ரொம்ப புரிதலான நட்பு” என்பவரிடம் “மீனா குறித்து நீங்கள் நெகிழ்ந்த தருணம் எது?” என்றோம்.

“அவளைப் பார்த்து நெகிழ்ந்த விஷயம் என்னன்னா, தன்னோட கணவரோட உயிரைக் காப்பாற்ற மீனா அலைஞ்சு திரிஞ்சு போராடின அந்த மூணு மாசம்தான். எவ்ளோ கஷ்டப்பட்டாங்கிறதைக் கண்கூடா பார்த்தேன். எப்படியாவது கடவுள் காப்பாத்திடுவார்ங்கிற நம்பிக்கைல தினமும் கோயில் கோயிலா சுத்துவா. கோயில்லயே ரொம்ப நேரம் உட்கார்ந்து மனமுருகி வேண்டி அழுதுக்கிட்டிருப்பா. ஹாஸ்பிட்டல் விட்டா கோயில், கோயில் விட்டா ஹாஸ்பிட்டல். இதுக்கிடையில, மாற்று நுரையீரலுக்கான தேடுதல்ன்னு ஒவ்வொரு நொடியையும் வேதனையோடும் படபடப்போடும்தான் கடந்தாள்.

கணவர் விதயசாகருடன் மீனா

சாகர் மேல அவ காட்டினா பாசத்தைப் பார்த்து அசந்து போய்ட்டேன். ஏன்னா, மீனாவுக்குப் பெருசா வெளியுலகம் தெரியாது. அவங்க அம்மா பொக்கிஷம் மாதிரி அவளை வளர்த்தாங்க. சாகர்தான் ‘தைரியமா இருக்கணும்… எதுவா இருந்தாலும் தனியா சமாளிக்கணும்’னு அவளுக்கு நிறைய விஷயங்களைக் கத்துக்கொடுத்திருக்கார். இப்போ அவ தன்னம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்வதற்கும் அவர் உயிரோடு இருக்கும்போது கொடுத்த தன்னம்பிக்கைதான் காரணம். அப்படியொரு அற்புதமான மனிதர் சாகர்.

அவரோட உயிரை மீட்க எவ்ளோ போராடணுமோ அவ்ளோ போராடினா மீனா. அந்தப் போராட்டத்தைப் பார்த்து கண்கலங்கி பிரமிச்சுப் போய்ட்டேன். கவனிச்சுக்கிட்ட விதத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதேன். நானும் கடவுள்கிட்டே வேண்டிக்கிட்டேன். ஆனா, இப்படி ஆகும்னு யாருமே எதிர்பார்க்கல. புராணங்களில்தான் கணவரின் உயிரை மீட்க தீர்க்கமா போராடின பெண்களைப் பார்த்திருப்போம்; கேள்விப்பட்டிருப்போம். ஆனா, நான் அந்தப் பெண்களோட முழு உருவமா மீனாவைப் பார்த்தேன். ரொம்ப பொறுமை! கோவம்கூட அவளுக்கு வராது. வந்தாகூட சைலண்ட்டா இருப்பா. அவளுக்குப்போய் இப்படியொரு நிலைமை. கொஞ்சம் கொஞ்சமா மீண்டு வந்தாலும் வலியும் வேதனையும் வெறுமையும் அவளுக்குத்தான் தெரியும்.

சாகர் எல்லோர்கிட்டேயும் ஃப்ரெண்ட்லியா பழகுவார். ஐ.டி துறையில பெரிய ஆஃபிஸரா இருந்தார். ஆனா, ஓய்வு நேரத்துல அதெல்லாம் தூக்கிப் போட்டுட்டு மீனாவுக்கும் மகளுக்கும் ஆசையா சமைச்சுக் கொடுத்து அசத்திடுவார். அவரோட சமையல்ல ஃபிஷ் ஃப்ரை விரும்பிச் சாப்பிடுவேன்.

மீனா அம்மாவுடன் கலா மாஸ்டர்

அதேமாதிரி, என்னோட சமையல் மீனாவுக்கு ரொம்பப் பிடிக்கும். பிரியாணி, சில்லி சிக்கன் விரும்பிச் சாப்பிடுவா. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆசையா செஞ்சுக் கொடுப்பேன். ஆனா, எங்க எல்லோருக்குமே ரொம்ப பிடிச்ச சமையல் ஆன்ட்டியோட சமையல்தான். அதாவது, மீனா அம்மாவோட சமையல். அற்புதமா சமைப்பாங்க. என்ன சமைச்சாலும் அது செம்ம டேஸ்ட்டுதான். சாதாரண தயிர் சாதம்னாகூட பிரமாதப்படுத்திடுவாங்க. அவங்களை நான், ‘மதர் இந்தியா’ன்னுதான் கூப்பிடுவேன். ரொம்ப ஸ்ட்ரிக்ட். எந்த இடத்துல கண்டிப்பு காட்டணும், எப்போ அரவணைச்சுப் போகணும்ங்கிறதுல கரெக்ட்டா இருப்பாங்க. என்னையும் பொண்ணு மாதிரிதான் பார்த்துப்பாங்க.

சாகர் அவங்களை தன்னோட அம்மாவாத்தான் பார்த்துக்கிட்டார். என்னை அவரோட சகோதரியாத்தான் நடத்துனார். ‘சேச்சி… சேச்சி’ன்னு வாய் நிறைய கூப்பிடுவார். என்னை கிண்டல் பண்ற ஒரே நபர் அவர்தான். அந்தளவுக்கு ஜாலி டைப். இருக்கிற இடமே கலகலப்பாகிடும். நல்ல சகோதரனை இழந்துட்டோம்ங்கிறது பெரிய வருத்தமா இருக்கு. நேத்து சாகரோட நினைவுநாள்ங்கிறது தெரியும். வழக்கம்போல, மீனாகிட்டே நேத்தும் பேசினேன். ஆனா, சாகர் பத்தி ஒரு வார்த்தைக்கூட பேசல. ஏற்கெனவே, கணவரை இழந்த சோகத்துல இருக்கும்போது, சாகர் பத்தி பேசி மீனாவை வேதனைப்படுத்த விரும்பல. வாட்ஸப்ல ‘டேக் கேர்’னு வாய்ஸ் நோட் மட்டும் அனுப்பினேன்.

வெளில மீனா நார்மலா இருக்கலாம். ஆனா, சாகரை எவ்ளோ மிஸ் பண்றாங்கிறது எங்களுக்குத்தான் தெரியும். மீனாவோட பொண்ணு சாகர் மாதிரி. செம்ம போல்ட். அப்பா இல்லாத வெறுமையை சமாளிச்சுக்கிறா. ஆனா, மீனாதான் பாவம். அடிக்கடி தனியா அழுதுக்கிட்டிருப்பா. ரெண்டு பேருமே ரொம்ப லவ்வபிள் ஜோடி. விட்டுக்கொடுத்துப் போவாங்க. அவங்களுக்குள்ள சண்டை வந்ததை நான் பார்த்ததே கிடையாது.

மீனா

மீனாவோட அப்பா இறந்து பத்து வருஷம் மேல ஆகுது. ஒரு அப்பாவாகவும் நல்ல கணவராகவும் ஆன்ட்டிக்கு நல்ல மகனாகவும் வீட்டுக்குத் துணையாவும் சாகர்தான் இருந்திருக்கார். எல்லோரையும் ரொம்ப வெல்கம் பண்ணுவார். நமக்கே உடம்பு சரியில்லைண்ணாக்கூட ‘சேச்சி இதை எடுத்துக்கோங்க… அதை எடுத்துக்கோங்க’ன்னுவார். என் கணவருக்கும் நல்ல ஃப்ரெண்ட். மீனாவும் எவ்ளோ கஷ்டம் வந்தாலும் ‘கலா சேச்சி இருந்தா போதும்’னு சொல்லி, என்கிட்டேதான் கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ணுவா.

இந்த ரெண்டு வருடத்துல அவளைக் கொஞ்சம் கொஞ்சமா மீட்டுக் கொண்டு வந்திட்டிருக்கோம். எங்களுக்கே சாகரோட இழப்பு, தாங்க முடியலைன்னா மீனாவுக்கு எப்படியிருக்கும்? 12 வருடம் ஒண்ணா வாழ்ந்தவங்களாச்சே? அதுவும், சின்ன வயசிலேயேங்கிற வலி, வேதனை கூடுதலாத்தான் இருக்கும்” என்பவர், கணவர் மறைவுக்குப் பிறகும் மீனா, தனது மாமியாருக்கு நல்ல மருமகளாகவும் தொடர்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

“சாகரோட அம்மா டீச்சரா இருந்தவங்க. சாகர் ஒரே மகன். அவர், இடத்துல இப்போ மீனாதான் மகனா இருந்து மாமியாரைக் கவனிச்சுக்கிறா. அவங்களுக்கு வேண்டிய மருந்து, மாத்திரை செலவு, மளிகை சாமான்கள், சமையல்காரர் சம்பளம், கரெண்ட் பில்ன்னு ஒண்ணு விடாம எல்லாத்தையும் பார்த்துக்கிறா. சாகர் அம்மாவால சரியா நடக்க முடியாது. மகன் இல்லாத குறை அவங்களுக்குத் தெரியக்கூடாதுன்னு தினமும் 45 நிமிடம் பேசிடுவா. மாமியார்கிட்டேருந்து போன் வந்துட்டா போதும், ‘சொல்லுங்கம்மா’ன்னு பொறுமையா பேசிக்கிட்டிருப்பா. இப்போவரை, மாமியாரை அம்மான்னுதான் கூப்பிடுவா.

கணவருடன் மீனா

நாங்களே, ‘அய்யயோ… மாமியார் போன் பண்ணிட்டாங்களா?’ன்னு கிண்டல் பண்ணுவோம். அந்தளவுக்கு கேர் பண்ணிக்கிறா. அவங்க பெங்களூர்ல இருக்காங்க. ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை மகளோட போய், மாமியாரைப் பார்த்துட்டு வந்துடுவா. பொதுவா, மாமியார் மருமகள்னாலே சண்டைதான் வரும். ஆனா, மீனா தன்னோட மாமியாரை அம்மாவா பார்க்கிறது பெரிய விஷயம். அதுவும், கணவர் இல்லாத சூழல்ல மாமியார் மேல அதே அன்போட இருக்கிறது நெகிழ வெக்குது. சாகர் மேல மீனா வெச்சிருக்கிற பேரன்பாலதான், அவரோட அம்மாவையும் இந்தளவுக்கு நேசிக்க முடியுது. உண்மையிலே அவங்களுக்கு ‘மீனா பொண்ணு… மீனா பொண்ணு’தான் அவ. இந்த மாதிரி ஒரு குணமான பொண்ணு எனக்குத் தோழியா கிடைச்சதுல ரொம்பவே பெருமைப்படுறேன்” என்கிறார் கண் கலங்கியபடி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.