Cinema Roundup: ரஜினி – சூர்யா நேருக்கு நேர்; நடராஜன் பயோபிக் அப்டேட் – இந்த வார சினிமா தகவல்கள்!

இந்த வார டாப் சினிமா தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வேட்டையனுடன் மோதும் கங்குவா:

ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் தயாராகி வருகிறது. த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, துஷாரா விஜயன் எனப் பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது. இத்திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகிறதென இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா முன்பே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால், ரீலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில் ஒருவேளை அக்டோபர் 10-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகலாம் எனவும் பேசப்பட்டு வருகிறது. தற்போது அதே தேதியில் சூர்யா நடித்திருக்கும் ‘கங்குவா’ திரைப்படம் வெளியாகிறது எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில் பாபி தியோல் முக்கிய வில்லனாக நடித்திருக்கிறார்.

Kanguva & Vettaiyan

அப்படி ‘வேட்டையன்’ திரைப்படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாவது உறுதியானால் ரஜினி மற்றும் சூர்யா திரைப்படங்கள் மோதிக் கொள்ளும் முதல் முறை இதுவாகத்தான் இருக்கும். கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சூர்யா நடித்திருந்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் ஓ.டி.டியிலும் ரஜினி நடித்திருந்த ‘அண்ணாத்த’ திரைப்படம் திரையரங்கத்திலும் வெளியாகியிருந்தது. ‘அண்ணாத்த’ திரைப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவாவும், ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை இயக்குநர் த.செ.ஞானவேலும் இயக்கியிருந்தார்கள். தற்போது அதே த.செ.ஞானவேல் ரஜினியை வைத்தும் சிறுத்தை சிவா சூர்யாவை வைத்தும் திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது கூடுதல் சுவாரஸ்ய தகவல்.

நாயகனாகும் நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ்!

நடிகர் முரளியின் மூத்த மகனான அதர்வா முரளி ‘பாணா காத்தாடி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். கடைசியாக அவர் நடித்திருந்த ‘மத்தகம்’ வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது அவருடைய சகோதரரான ஆகாஷ் முரளி நாயகனாக அறிமுகமாகிறார். அஜித்தை வைத்து மாஸ் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குநர் விஷ்ணுவர்தன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ‘நேசிப்பாயா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்றைய தினம் வெளியிட்டிருந்தனர். ‘மாஸ்டர்’ திரைப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இப்படத்தைத் தயாரித்திருக்கிறார். மேலும், சேவியர் பிரிட்டோவின் மருமகன்தான் ஆகாஷ் முரளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Aakash Murali & Shankar

ஷங்கர் சினிமாடிக் யுனிவர்ஸ்!

ஒரு இயக்குநர் தன்னுடைய திரைப்படங்களின் கதாபாத்திரத்தை மற்ற திரைப்படங்களில் பயன்படுத்தும் வழக்கத்தை சினிமாடிக் யுனிவர்ஸ் எனக் கூறி வருகிறார்கள். இது ஹாலிவுட்டில் பிரபலமான வர்த்தக முயற்சிதான். தமிழில் இந்த வழக்கத்தை இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, புஷ்கர் காயத்ரி, லோகேஷ் கனகராஜ் ஆகியோர் தங்களின் திரைப்படங்களில் பயன்படுத்தினார்கள். ஆனால், இந்த ஐடியாவை அதற்கு முன்பே இயக்குநர் ஷங்கர் வைத்திருந்தாராம். இந்தியன் 2 திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் பிஸியாக இயங்கிக் கொண்டிருப்பவர் இது குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

“‘எந்திரன்’ திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் எனக்கு ஒரு ஐடியா கிடைத்தது. இந்தியன் தாத்தாவையும், முதல்வன் புகழேந்தியையும், சிவாஜியையும் ஒரே திரைப்படத்தில் கொண்டு வந்தால் எப்படி இருக்குமென யோசித்து என்னுடைய இணை இயக்குநர்களிடம் கேட்டேன். அவர்கள் அதற்குச் சரியான ரெஸ்பான்ஸ் கொடுக்கவில்லை. அதனால் அந்த ஐடியாவையும் நான் அதன் பிறகு கைவிட்டுவிட்டேன். அதன் பிறகு கொஞ்ச நாள்கள் கழித்துத்தான் ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்தேன். ஒரு ஐடியா தோன்றிவிட்டால் அதனை உடனடியாக செய்துவிட வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

திருமணமாகி 16 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவு செய்த மலையாள நடிகர்!

‘டிரான்ஸ்’, ‘அச்சயன்ஸ்’ போன்ற திரைப்படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் தர்மராஜனுக்கு 16 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. அவருடைய சில தனிப்பட்ட காரணங்களுக்காக அப்போது அந்தத் திருமணத்தை அவர் பதிவு செய்யவில்லை. தற்போது 16 வருடங்களுக்குப் பிறகு அவரின் திருமணத்தை பதிவு செய்திருக்கிறார்.

அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இந்தப் பதிவுத் திருமணம் தொடர்பான அவரின் பதிவு சமூல வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Natrajan Biopic

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் நடராஜன் பயோபிக்!

கிரிக்கெட் வீரர் நடராஜன் பயோபிக்கில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி நீண்ட நாள்களாகப் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் நடராஜனே இது பற்றிக் கூறியிருக்கிறார்.

“சிவகார்த்திகேயன் ரெடியா இருக்காரு. ‘எப்போனு சொல்லுங்க நான் வர்றேன்’னுதான் அவர் சொல்றாரு. ‘சீசன்லாம் முடிச்சுட்டு சொல்றேன்’னு நானும் சொல்லியிருக்கேன். அவரேதான் எடுக்குறாரு. அவரே நடிக்கிறதாகவும் சொல்லியிருக்காரு” என அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.