Doctor Vikatan: பீரியட்ஸ் தள்ளிப்போனால் எத்தனை நாள்களில் மருத்துவரைச் சந்திக்க வேண்டும்?

Doctor Vikatan: என் வயது 26. திருமணமாகி 6 மாதங்கள் ஆகின்றன.  கர்ப்பத்துக்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். ஒருவேளை பீரியட்ஸ் தள்ளிப்போனால் உடனடியாக மருத்துவரைச் சந்திக்க வேண்டாம் என்கிறார் என் மாமியார். அதெல்லாம் அந்தக் காலம்… அடுத்தநாளே மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்கிறாள் தோழி. இருவர் சொல்வதில் எது சரி… பீரியட்ஸ் தள்ளிப்போன எத்தனையாவது நாளில் மருத்துவரை அணுக வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.

மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் | சென்னை.

உங்களுடைய மாதவிலக்கு சுழற்சி ரெகுலராக இருக்கும்பட்சத்தில், 2 நாள்கள் பீரியட்ஸ் தள்ளிப்போனாலே, உடனடியாக மருத்துவரிடம் சென்று செக் செய்து கொள்ள வேண்டியது அவசியம். 

ஒருவேளை அது கர்ப்பம் தரித்திருப்பதன் அறிகுறியாக இருந்தால்,  சீக்கிரமே அந்தத் தாய் ஃபோலிக் அமில (folic acid) மாத்திரைகளைத் தொடங்குவதன் மூலம், குழந்தையின் மூளை வளர்ச்சியை ஆரோக்கியமாக இருக்கச் செய்ய முடியும்.  முந்தைய காலத்தில் எல்லாம் 40- 50 நாள்கள் ஆன பிறகு மருத்துவரைப் பார்த்தால் போதும் என்று சொல்வார்கள். ஆனால், இன்று அப்படியெல்லாம் அவசியமில்லை. 

எவ்வளவு சீக்கிரம் கர்ப்பிணிக்கு ஃபோலிக் அமில மாத்திரைகள் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும் என்பது  விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டிருப்பதால்,  பீரியட்ஸ் தள்ளிப்போன உடனேயே மருத்துவரைச் சந்திக்கலாம்.  அது தவிர, அந்தப் பெண்ணுக்கு கர்ப்பம் ஆரோக்கியமான முறையில்தான் உருவாகியிருக்கிறதா அல்லது கருக்குழாயில் பதிந்திருக்கிறதா என்றும் பார்க்க வேண்டியது அவசியம். அரிதாக சிலருக்கு கருக்குழாய்களில் கரு பதிந்து வளரத் தொடங்கும். ‘எக்டோபிக் பிரெக்னன்சி’ (ectopic pregnancy ) என்று சொல்லப்படும் இதைச் சீக்கிரமே கண்டுபிடித்துவிட்டால், மருந்துகளின் உதவியோடு அந்தக் கருவை அகற்றிவிடலாம்.

Periods: ரத்தப் பரிசோதனை…

பீரியட்ஸ் தள்ளிப்போனதாக மருத்துவரைச் சந்தித்தால் அவர் முதலில் பீட்டா ஹெச்சிஜி (Beta hCG) என்ற ரத்தப் பரிசோதனையைச் செய்வார். அந்த டெஸ்ட்டில் சில அளவுகளைப் பார்க்க வேண்டியிருக்கும். அதில் சந்தேகம் வந்தால் இன்னும் இரண்டு நாள்கள் காத்திருக்கச் சொல்லிவிட்டு, மீண்டும் அதே டெஸ்ட்டை செய்யச் சொல்வார்கள். பீட்டா ஹெச்சிஜி அளவானது இரண்டு மடங்காக வேண்டும். அப்படி ஆகும்பட்சத்தில் அந்தக் கர்ப்பம் நல்ல முறையில் இருப்பதாகவும், நல்லபடி வளரும் என்றும் அர்த்தம். 

ஒருவேளை அந்த பீட்டா ஹெச்சிஜி அளவானது மிகக் குறைந்த அளவே அதிகரித்திருந்தால், கரு நன்றாக வளரவில்லை என அர்த்தம்.  கரு கலைந்துபோகவோ, கருக்குழாயில் பதிந்து வளரவோ வாய்ப்புகள் அதிகம். அப்படிப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணுக்கு வழக்கத்தைவிட சற்று சீக்கிரமே அல்ட்ரா சவுண்டு சோதனை செய்ய வேண்டியிருக்கும்.  அதாவது 2 வாரங்களுக்குள் ஸ்கேன் செய்து பார்த்துவிட்டு, கருவானது கர்ப்பப்பையில் இருக்கிறதா, வெளியே கருக்குழாயில் உருவாகியிருக்கிறதா என்று பார்க்கப்படும். 

கர்ப்பப்பையில்தான் இருக்கிறது என்றால், கருவின் இதயத்துடிப்பை செக் செய்வார்கள் மருத்துவர்கள்.  இதயத்துடிப்பு இருக்கும்பட்சத்தில் அந்தக் கரு நன்றாகவே வளரும்.  கருக்குழாயில் கரு பதிந்திருந்தால் லேப்ராஸ்கோப்பி அல்லது மருந்துகள் என எந்த முறையில் அதை அகற்ற வேண்டும் என்றும் மருத்துவர் முடிவு செய்வார்.

எனவேதான், பீரியட்ஸ் தள்ளிப்போனதும் தாமதிக்காமல் உடனே மருத்துவரைக் கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.