பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் இறங்கியுள்ளது. டாஸ் வெற்றி பெற்ற கேப்டன் ரோகித் சர்மா சற்றும் யோசிக்காமல் பேட்டிங் தேர்வு செய்வதாக அறிவித்தார். ஏற்கனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியே வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா கேப்டன் மார்ஷ், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் ஆகியோர் டாஸ் வெற்றி பெற்று பவுலிங்கை தேர்வு செய்தனர். இது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தது. அந்த போட்டியில் டாஸ் போடும்போது பேசிய ரோகித் சர்மா, டாஸ் வெற்றி பெற்றிருந்தாலும் பேட்டிங் தான் எடுத்திருப்போம், நல்ல வேளையாக டாஸ் தோற்றபோதும் எங்களுக்கு பேட்டிங் ஆடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
ஆனால், இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு சாதகமாகவே டாஸ் விழுந்தது. இதனால் நிம்மதி அடைந்த கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் ஆடுவதாக அறிவித்தார். பார்படாஸ் மைதானத்தில் நாங்கள் ஏற்கனவே ஆடிய அனுபவம் இருப்பதால், முதலில் பேட்டிங் செய்வதே சிறந்தது என நினைக்கிறோம். தென்னாப்பிரிக்கா அணியும் சிறந்த அணி என்பது எங்களுக்கு தெரியும். அவர்களும் இந்த தொடர் முழுவதும் சிறந்த கிரிக்கெட்டை ஆடியிருக்கிறார்கள். பிளேயிங் லெவனை பொறுத்தவரை இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த போட்டிகளில் விளையாடிய அணியே இந்த போட்டியிலும் விளையாடுகிறோம் என கூறினார்.
ரோகித் சர்மாவைத் தொடர்ந்து பேசிய தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் எய்டன் மார்கிரம் பேசும்போது, நாங்களும் டாஸ் வெற்றி பெற்றிருந்தால் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். இருந்தாலும் டாஸ் எங்கள் கையில் இல்லை. எங்களைப் பொறுத்தவரை எந்த அழுத்தமும் இல்லை. வழக்கமான கிரிக்கெட்டை விளையாடுவோம். தென்னாப்பிரிக்கா அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 9 ரன்களுக்கு அவுட்டாக, ரிஷப் பந்த் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியதால் இந்திய அணி சிக்கலில் சிக்கியது. இருப்பினும் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிக் கொண்டடிருக்கின்றனர்.