Virat Kohli: "இளைஞர்களுக்கு வழிவிடுகிறேன்!" – வெற்றியோடு டி20-லிருந்து ஓய்வை அறிவித்த விராட் கோலி!

17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று சாதித்திருக்கிறது. இப்படியொரு மாபெரும் தருணத்தில் இந்திய அணியின் முக்கிய வீரரான விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். இறுதிப்போட்டியில் இந்திய அணிக்காக ஆகச்சிறந்த இன்னிங்ஸை ஆடி ஆட்டநாயகன் விருதை வென்றுவிட்டு ஓய்வை அறிவித்திருக்கிறார் கோலி.

Virat

விராட் கோலி பேசுகையில், “இதுதான் என்னுடைய கடைசி டி20 உலகக்கோப்பை. இதுதான் இந்தியாவுக்காக என்னுடைய கடைசி டி20 ஆட்டம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினேன். இன்று கோப்பையை ஏந்த நினைத்தேன். இறைவன் மிகப் பெரியவர். அணிக்கு மிகவும் தேவைப்படும் ஒரு நாளில் என்னால் ரன்கள் அடிக்க முடிந்தது. அடுத்த தலைமுறையில் அற்புதமான வீரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்தியக் கொடியை உயர்த்திப் பிடிப்பார்கள்.

Virat

ஐ.சி.சி தொடரை வெல்ல நாங்கள் ரொம்ப காலமாகக் காத்திருந்து விட்டோம். ரோஹித் 9 டி20 உலகக்கோப்பைகளை ஆடிவிட்டார். நான் 7 உலகக்கோப்பைகளை ஆடிவிட்டேன். ரோஹித்தும் இந்த மாபெரும் வெற்றிக்காக உரித்தானவர். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள கடினமாக இருக்கிறது. இது ஒரு அற்புதமான நாள். எல்லாருக்கும் நன்றி!” என்றார்.

விராட் கோலி இன்று ஆடிய ஆட்டம்தான் இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்தத் தொடர் முழுக்க விராட் கோலி சுமாராகத்தான் ஆடியிருந்தார். 7 போட்டிகளில் 75 ரன்களை மட்டும்தான் அடித்திருந்தார். ஆனால், இந்தப் போட்டியில் பவர்ப்ளேக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கோலி களத்தில் நின்று கடைசி வரை ஆடி அசத்தினார். அவரால்தான் இந்திய அணி 176 ரன்களை அடித்தது.

Virat

விராட் கோலி மகத்தான வீரராக இருந்தாலும் கடந்த தலைமுறை வீரர்களோடு இணைந்து கோப்பையை வென்றிருந்தாலும் அவர் தலையெடுத்த பிறகு ஒரு பெரிய கோப்பையை வெல்லவே இல்லை என்கிற விமர்சனம் அவர் மீது உண்டு. அந்த விமர்சனம் இந்த வெற்றியின் மூலம் நொறுங்கியிருக்கிறது. இந்த மாபெரும் வெற்றியோடு சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வையும் அறிவித்திருக்கிறார். சிறப்பான விடைபெறல். வாழ்த்துகள் விராட் கோலி!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.