ஆந்திராவில் தீ வைத்து சேதப்படுத்தப்பட்ட ஒய்எஸ்ஆர் சிலை – செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமது இளமைப்பருவம் முதல் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து ஆந்திர மாநிலம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு மக்களை சந்தித்து உரையாடி, நம்பிக்கை பெற்று சோனியா காந்தியின் ஆதரவோடு அம்மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றியவர் மறைந்த ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி. அம்மாநிலத்தில் பரவியிருந்த பிற்போக்கு சீர்குலைவு சக்திகளை முறியடித்து, ஆந்திர மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர்.

அத்தகைய பெருமகனார் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தது ஆந்திர மாநிலத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பேரிழப்பு. அத்தகைய வலிமையான தலைமையை இழந்ததனால்தான் இன்றைக்கு மொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆந்திர மாநிலம் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்றுபட்ட ஆந்திராவின் வளர்ச்சிக்கு தம்மை அர்பணித்த மறைந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் திருவுருவச் சிலை, தீ வைத்து சேதப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.



ஒட்டுமொத்த ஆந்திர மாநில வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட மறைந்த தலைவரை இழிவுபடுத்துகிற வகையில் அவரது சிலையை சேதப்படுத்தியதை விட நன்றி கெட்ட செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட செயலை செய்தவர்கள் எவராக இருந்தாலும் ஆந்திர மாநில மக்கள் அவர்களை மன்னிக்க மாட்டார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.