இந்திய மக்கள் திருமணத்துக்காக அதிகம் செலவு செய்கிறார்களா? – அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்..!

சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவில், ‘இந்தியத் திருமணங்களின் மூலம் உருவான சந்தையின் மொத்த மதிப்பு 10.7 லட்சம் கோடி ரூபாய் எனவும், இது அமெரிக்காவைக் காட்டிலும் அதிகம்’ எனவும் சொல்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரிஸ் (Jefferies) என்பது பன்னாட்டு முதலீட்டு மற்றும் நிதி நிறுவனம். நியூயார்க்கைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வருகிறது . இந்நிறுவனம் சமீபத்தில் இந்தியர்களின் திருமண செலவுகள் மற்றும் திருமணத்திற்கான சந்தை மதிப்புகளைப் பற்றி ஆய்வு ஒன்றை நடத்தியது.

Jefferies

அந்த ஆய்வின்படி, இந்தியத் திருமணங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.10.7 லட்சம் கோடி எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது இது அமெரிக்காவைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகும். ஒவ்வொரு திருமணத்திற்கும் சராசரியாக ரூ.12.5 லட்சம் ரூபாய் வரையிலும் செலவு செய்யப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.4 லட்சமாக உள்ள நிலையில், வருமானத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக திருமணத்திற்குச் செலவு செய்வதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதோடு இந்தியர்களின் தனிநபர் வருமானமான 2.4 லட்சம் ரூபாயைவிடவும் ஐந்து மடங்கு அதிகமாக, ஒரு திருமணத்திற்கான செலவுகள் உள்ளன. இது மட்டுமில்லாமல் பெரும்பாலான ஆடம்பர கல்யாணங்களுக்கு ரூ.30 லட்சம் மற்றும் அதற்கு மேலும் செலவு செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.

ஒரு திருமணம் என்றாலே அதில் முக்கியப்பங்கு வகிப்பது ஆடைகள் மற்றும் நகைகள் தான். அவற்றின் செலவிற்காக சுமார் 30% பணம் செலவிடப்படுகிறது. உணவு மற்றும் அது சார்ந்தவைக்காக சுமார் 20% பணம் செலவு செய்யப்படுகிறது. போட்டோகிராஃபி, மேடை அலங்காரம் போன்ற இதர ஆடம்பர செலவுகளுக்காகவும் அதிக அளவில் பணம் செலவு செய்யப்படுவதாக ஆய்வில் சொல்லப்பட்டிருக்கிறது.

wedding

இந்தியத் திருமணங்களால், ஜவுளி, நகை, உணவு போன்ற துறைகளைச் சார்ந்த அனைவரும் பலன் அடைகின்றனர். இதன் மூலம் இந்தியச் சந்தையின் மதிப்பு மற்றும் அதன் அளவு அதிகமாவதாகக் கூறப்படுகிறது.

எல்லாவற்றிலும் இந்தியாவை முந்தும் சீனா, திருமணச் செலவுகளை அதிகம் செய்வதிலும் இந்தியாவை முந்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது இந்தியர்களை விட சீனர்கள் அவர்களது திருமணங்களுக்கு அதிகம் செலவு செய்கிறார்களாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.